ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் சமேத அருள்மிகு கள்ளழகர் பற்றிய சில தகவல்கள்

திருமாலிருஞ்சோலை அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது . இதற்கு திரு மாலிருஞ்சோலை, உத்யானசைலம் , சோலைமலை, மாலிருங்குன்றம் , இருங்குன்றம், வனகிரி, விருஷபாத்ரி அல்லது இடபகரி முதலிய பல பெயர்கள் உண்டு.
மூலவர் :-

ஸ்ரீபரமஸ்வாமி, பஞ்சாயுதங்களுடன் ஸ்ரீதேவி பூதேவி சூழ பிரயோகச்சக்கரத்துடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார் :- சுந்தரவல்லி, ஸ்ரீதேவி என்ற பெயரும் உண்டு.
உற்சவர் :-
சுந்தரராஜன், கள்ளழகர் எனும் திருநாமம். இங்கு உற்சவர் மிகவும் பேரழகு வாய்ந்தவர். இந்த உற்சவர் அபரஞ்சியால் செய்யப்பட்டவர்.
இந்தியாவிலேயே இங்கும் திருவனந்தபுரத்திலும் மட்டுமே அபரஞ்சியால் செய்யப்பட்ட உற்சவர்கள் உள்ளனர். சோலைமலைக்கரசர் என்றே திவ்யபிரபந்தம் இந்த உற்சவமூர்த்தியை வர்ணிக்கிறது. புராணம். “ரிஷபாதீஷர்” என்று அழைக்கிறது. மூலவரை விட உற்சவர் பெரும் புகழ் பெற்ற ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று.
அழகர் மலை அழகருக்கு வித்தியாசமான தோசை நெய்வேத்யம் செய்யப்படுகின்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், நெய் கலந்த சிறப்புத் தோசை தயாரிக்கப்படும்.
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மூலவர் சுந்தரராஜ பெருமாளுக்கு நடத்தப்படும் தைலப் பிரதிஷ்டை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இந்தப் பிரதிஷ்டை உற்சவம் தை அமாவாசை தொடங்கி ஆடி அமாவாசை வரை ஆறுமாத காலத்துக்கு நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் உற்சவரை மட்டும் வழிபட அனுமதி உண்டு.