கார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை…  விளக்கேற்ற வேண்டிய நேரம்..!!

கார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை…  விளக்கேற்ற வேண்டிய நேரம்..!! குறித்த வாட்ஸ் அப் பதிவு

கார்த்திகை தீப விரத முறை..!!

கார்த்திகை மாதமும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இல்லங்களிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுவது கார்த்திகை தீபத் திருநாளாகும்.

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்ற ஒருநாளாகும். கார்த்திகை தீபத் திருநாளில் மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டின் முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.

கார்த்திகை தீபத் திருநாள் நம் வீட்டிலுள்ள இருளை அகற்றி ஒளிமயமான வாழ்வைக் கொடுக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கார்த்திகை தீபத் திருநாளை விரதமிருந்து வழிபட்டால் வளமான வாழ்வைப் பெறலாம்.

விரத முறை :

கார்த்திகை தீப விரதத்தைப் பரணி நட்சத்திர நாளில் துவங்க வேண்டும். பரணி நட்சத்திரத்தன்று ஒருவேளை மட்டுமே உணவு உண்ணலாம். பக்கத்தில் இருக்கும் சிவன் அல்லது முருகன் கோவிலுக்குச் சென்று விரதத்தைத் தொடங்கலாம். இரவு சர்க்கரை போடாத பால், இனிப்பு குறைவான பழங்கள் இவற்றை அரை வயிறு எடுத்துக் கொள்ளலாம்.

மறுநாள் கார்த்திகை திருநாளில் அதிகாலை எழுந்து, நீராடி இறைவனை வணங்க வேண்டும். சிவ துதிகளையும் அல்லது முருகன் துதிகளையும் சொல்லலாம். தெரியாதவர்கள் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை 12 முறை ஜபிக்க வேண்டும்.

மாலை திருவண்ணாமலை தீபம் ஏற்றியவுடன் கடவுளை மனமுருகி வேண்டிக்கொண்டு சிறிது பழச்சாறு அருந்தி விரதத்தை முடிக்க வேண்டும். ஆனால் அன்று அரிசி உணவு உண்ணக்கூடாது. பால், ஜவ்வரிசி கஞ்சி, பயத்தம்பருப்பு கஞ்சி இவற்றை உண்ணலாம்.

பலன்கள் :

திருக்கார்த்திகை விரதம் இருந்தால் துன்பங்கள் நீங்கி தீப ஒளி போல் வாழ்க்கை பிரகாசிக்கும்.

இவ்விரதம் மேற்கொள்வதால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

கார்த்திகை விரதத்தைத் தொடர்ந்து 12 ஆண்டுகள் கடைப்பிடித்தால் எண்ணியவை யாவும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

விளக்கேற்ற வேண்டிய நேரம் :

கார்த்திகை தீபத்திருநாளன்று மாலைவேளையில் 5.30 மணிக்குமேல் வீட்டில் விளக்கேற்ற வேண்டும்.

வாசனையுள்ள மலர்களைத் தொடுத்து அதை இறைவனுக்குச் சமர்ப்பித்து வணங்க வேண்டும்.

கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்ற உகந்த நாட்களாகும். தினமும் விளக்கு ஏற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தி மற்றும் பௌர்ணமி ஆகிய தினங்களில் கண்டிப்பாக விளக்கேற்ற வேண்டும்.