நவக்கிரகங்களும் அவற்றின் தன்மைகள் மற்றும் குணங்களும்

நவக்கிரகங்களும் அவற்றின் தன்மைகள் மற்றும் குணங்களும் பற்றிய பதிவு – முதல் பாகம்

1.சூரியன்:-

எப்போதும் ஒருவராகச் சஞ்சரிப்பவர். ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பவனி வருகிறார் சூரியன். ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கௌரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே!

சூரியன் ஆத்ம காரகன் என்று ஜோதிட சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறார். சூரியனை வைத்தே தகப்பனார், அரசாங்க பதவி, தந்தையின் உடன் பிறந்தவர்களின் விபரங்கள் ஜாதகத்தில் முடிவு செய்யப்படுகிறது.

உலகில் அசையும் பொருட்கள், அசையாத பொருட்கள் என அனைத்துக்கும் ஆத்மாவாக விளங்குவது சூரியனே ஆகும்.

2.சந்திரன்:-

“சந்த்ரமா மனஸோ ஜா” என்று போற்றப்படும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவரே உடலுக்குக் காரகன். சந்திரன் சோதிடத்தில் மனதுக்குக் காரகன் என்று அழைக்கப்படுகிறார். இவரை வைத்தே தாயாரின் நிலை கணிக்கப்படுகிறது. இது ஒரு நீர் க்ரஹம். சந்திரனுக்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரட்டை தன்மை உடையதால் அதற்கு ஏற்ப பலன்களும் மாறுபடும். வளர்பிறையில் சுப பலன் அதிகமாகவும் தேய்பிறையில் பலன் குறைவாகவும் தரும். தாயார் மனது துணிச்சல் செல்வம் நீர் சம்பந்தமான பொருட்கள் சந்தோஷம் தாயார் வழியில் உயர்வு பெறுதல் ஆகியவற்றுக்குச் சந்திரனே காரணமாகிறார்.

கடற்பயணம், ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, நடு நிலைமை, சுக போகம் இவற்றிற்குக் காரகன் சந்திரனே!

3.செவ்வாய்:-

செவ்வாய் போர்குணம் கொண்ட ஒரு க்ரஹம். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது எந்த காரியத்தையும் வெறித்தனமாக செய்யும். விருச்சிகத்தில் செவ்வாய் இருந்தால் வேகம் குறைவாகச் செய்யும்.

ரத்தத்திற்குக் காரகன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவர் செவ்வாய். உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவர் செவ்வாய். செவ்வாய் சகோதர காரகன் என அழைக்கப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் சகோதரர்களின் நிலையை அறியச் செவ்வாயின் நிலைகொண்டே கணிக்கப்படுகிறது. கண்டிப்பதும் இவரே, தண்டிப்பதும் இவரே. மாபெரும் போர் வீரர்களை வழி நடத்துபவர்.

4.புதன்:-

சோதிடத்தில் வித்யா காரகன் என்று அழைக்கப்படுபவர் புதன். கல்வி, மாமன், அத்தை, மைத்துனர்கள் தொடர்பில் புதனைக் கொண்டே கணிக்கப்படுகிறது.

பேச்சாற்றல், மாமன், அத்தை, மைத்துனர், கணிதம், நண்பர், சாதுரியம், கவிதை , சிற்பம், சித்திரம், நடிப்பு, நாடகம், எழுத்து கலை ,சாஸ்திர ஞானம் , நுண்கலைகள் ஆகியவற்றுக்குப் புதன் காரகம் வகிக்கிறார்.

5.குரு:-

குரு பகவான் புத்ரகாரகன் என்று ஜோதிடத்தில் அழைக்கப்படுகிறார். தன காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். குருவின் நிலை வைத்து ஒரு ஜாதகத்தில் குழந்தைகளின் நிலையை அறியமுடியும். எல்லா கிரகத்தின் தோஷத்தையும் நீக்கக்கூடியவர் குரு.

புத்திரர், அறிவு, மந்த்ர சாஸ்திரம். யானை, யாகங்கள், தெய்வ தரிசனம், தீர்த்த யாத்திரை, சமுதாயத்தில் நல்ல மதிப்பு, சொலவாக்கு, பணம் ஆகியவற்றுக்கு குரு காரகன் வகிக்கிறார்.

இவர் பிரகஸ்பதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். குரு தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார். குரு அமர்ந்த இடம் பொதுவாக நல்ல பலன்களைத் தருவதில்லை.

மற்ற நான்கு கிரகங்களின் விவரங்கள் அடுத்த பதிவில்