ராகு – கேது தோஷம் போக்கும் பாதாளேஸ்வரர் 

ராகு – கேது தோஷம் போக்கும் பாதாளேஸ்வரர்

ராகு – கேது தோஷம் போக்கும் பாதாளேஸ்வரர் பற்றிய ஓர் பதிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரில் பாமணி ஆற்றின் வடக்கு திசையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாமணி கிராமத்தில் அமிர்தநாயகி சமேத நாகநாதஸ்வாமி கோவில் உள்ளது. இத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பினை உடையது. இந்தக் கோவில் ராகு, கேது தோஷ பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.

காவிரியின் தென்கரை தலங்களில் 104-வது ஸ்தலம். ஸ்வாமி பாதாளத்தில் இருந்து சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருப்பதால் பாதாளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். நாகநாத ஸ்வாமி தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறார். வாசலில் வலதுபுறம் ஸ்வாமியை வணங்கிய நிலையில் மனித முகமும், சர்ப்ப உடலுமாய் தனஞ்சய முனிவராக ஆதிசேஷன் காட்சியளிக்கிறார்.

மகாவிஷ்ணு துயில் கொள்ளும் அஷ்ட நாகங்களான வாசுகி, கார்க்கோடகன், பத்மன், மகாபத்மன், சங்கன், சங்கபாலன், குளிகன், அனந்தன் ஆகிய அனைவருக்கும் தலைவரான ஆதிசேஷன் திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது உண்டான விஷத்தை ஈசன் உண்டதால் தனக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்க வழி தேடினார். அப்போது பாதாளத்தில் இருந்து தோன்றிய பாதாளேஸ்வரரை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்று அசரீரி கேட்டது.

ஆதிசேஷன் தனஞ்சய முனிவராகச் சுவாமியை வணங்கிய நிலையில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து ராகு-கேது தோஷ நிவர்த்தி வழங்குகிறார். இந்த விவரங்கள் தருவ நாடி, சப்த ரிஷி நாடி என்றழைக்கப்படும் நாடி ஜோதிட ஓலைச் சுவடிகளில் குறிப்பிட்டு தோஷ பரிகாரங்கள் செய்ய வழிபடச் சொல்கிறது.

பாதாளத்தில் இருந்து சுயம்பு லிங்கமாகப் புற்று மண்ணால் ஆன சர்ப்பபுரீஸ்வரர் என்று அழைக்கப்படும் நாகநாத ஸ்வாமிக்கும், அம்பாள் அமிர்த நாயகிக்கும் அபிஷேக, ஆராதனை, பூஜைகள் செய்து வழிபட்டால் பூமியின் புதல்வனான செவ்வாயின் தோஷம் நீங்கும். முன் ஜென்ம வினையால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும் எனத் தலபுராணம் கூறுகிறது.

சிவபெருமான் பார்வதி தேவியுடனும், குழந்தையான சுப்ரமண்யருடன் காட்சி தரும் கோலம் தான் சோமாஸ்கந்தர். இவருக்குச் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அபிஷேகம், பூஜைகள் செய்து வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வரச் செய்து தரிசனம் செய்து நைவேத்திய பிரசாதத்தை வினியோகம் செய்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.