சேலத்துக்குப் பெருமை சேர்த்த ஜஸ்டிஸ் சுந்தரம் அய்யா..!

சேலத்துக்குப் பெருமை சேர்த்த ஜஸ்டிஸ் சுந்தரம் அய்யா குறித்த நெட்டிசன் தகவல்

சேலம் வாசவி மகால் மேல்மாடிக்கு ஜஸ்டிஸ் சுந்தரம் ஹால் என்று பெயர்…!

ஆரிய வைஸ்ய சமூகத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமரர் திவான் பகதூர் K.சுந்தரம் செட்டியார் தான் ஜஸ்டிஸ் சுந்தரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்…! அவரின் வாழ்க்கை குறிப்புகளைச் சற்றே அறிந்து கொள்வோம்..!

சேலம் மாவட்டம் சேந்தமங்கலத்தில் வசித்துவந்த செல்வந்தர் கிருஷ்ணம்ம செட்டியாருக்கு 18.11.1875 அன்று பிறந்தவர்தான் சுந்தரம் செட்டியார்.

இளமையில் படுசுட்டியாக விளங்கிய இவர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பையும்,பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து F.L.Exam.ல் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவராகத் தேர்வாகி கல்வி உதவித் தொகையையும் இவர் பெற்றார்.

ஆங்கிலேயர்களே கண்டு வியக்கும் வண்ணம் ஆங்கில மொழியில் அதீத ஞானம் பெற்றிருந்தார். சட்ட நுணுக்கங்களை அறிந்த இவர் ஒரு சட்ட மேதையாகவே திகழ்ந்தார்.

சேலத்தில் வழக்கறிஞராக தன் பணியை ஆரம்பித்த இவரின் வாதத்திறமையையும், மதிநுட்பத்தையும் கண்ட ஆங்கிலேயர்கள் இவரை மாவட்ட் முன்சீப் ஆக 1902ல் நியமித்தனர். இந்தப் பதவிக்கு அவர் வந்த போது அவரின் வயது 27 என்றால் அவரின் திறமையை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

சேலம் வாசவி மகாலில் ஜஸ்டிஸ் சுந்தரம் செட்டியார் படத் திறப்பு

இவர் வழங்கிய நுட்பமான தீர்ப்புகள் இவருக்குப் பெறும் புகழைப் பெற்றுத் தந்தன. விரைவாக இவர் துணை நீதிபதிஆகவும், மாவட்ட நீதிபதி ஆகவும் பதவி உயர்வு பெற்றார்.

இவரை 1926ஆம் ஆண்டு தேர்தல் ஆணையர் விசாரணைக் குழு வின் தலைமை பொறுப்பில் அரசு இவரை நியமித்தது.

இவர் பணிகளுக்கிடையே பல பொதுச்சேவைகளையும் செய்துவந்தார்.எனவே இவருக்கு 1927ஆம் ஆண்டு  ராவ்பகதூர், திவான் பகதூர் எனப் பட்டத்தை அளித்து அரசாங்கம் இவரை கௌரவித்தது

1930 ஆண்டு அரசு இவரை officer on special duty as a member of the council of State,என்று டெல்லிக்கு அனுப்பியது. அதே ஆண்டு அதாவது 1930 ஜூலை மாதம் இவரைச் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதியாகப் பதவி உயர்வு அளித்தும் தன் கடமையைச் செய்தது.

1934 வரை நீதிபதியாகப் பதவிவகித்த இவர் தன் பதவி ஓய்விற்குப் பின் சேலத்தில் தன் மகள் வீட்டிலேயே தங்கிப் பல அறப்பணிகளைச் செய்து வந்தார்.

திருவண்ணாமலையில் இவர் முனிசீப்பாக பதவி வகித்த போது சேஷாத்திரி ஸ்வாமிகளின் அருளைப் பெற்றார் என்கிறார்கள். ஸ்வாமிகள் இவரிடம் தனிப்பாசம் காட்டியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதுபோல் ரமண மகரிஷியிடமும் பக்தி செலுத்தி வந்தார்.

1935ஆம் வருடம் சேலத்திற்கு அருகில் உள்ள அழகாபுரம் கிராமத்தில் தொற்றுநோய் பரவியபோது தானாக முன்வந்து பெரும் தொகை கொடுத்து அங்கிருந்த சிறு கிணற்றை ஆழப்படுத்தி பெரியதாக்கி அனைத்து குடிமக்களுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்தார். இந்தச் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது. சேலம் இராமகிருஷ்ணா தபோவனத்திற்கும், தியோசாபிக்கல் சொசைட்டி க்கும் தன் வாழ்நாள் முழுவதும் அதாவது 10.12.1951வரை தலைவராகத் திகழ்ந்தார்.

இவரைப் பெருமைப்படுத்தும் விதமாகச் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு சாலைக்கு ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இவர் அளித்த தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டிப் பல நீதிபதிகள் பின்னர் தீர்ப்பளித்திருக்கிறார்கள் என்பதை அறியும் போது நமக்கு மெய்சிலிர்ப்பது நிச்சயம்.

இவரின் நினைவாகச் சேலம் வாசவி மகால் மேல் மாடியில் ஜஸ்டிஸ் சுந்தரம் ஹாலை அவர்கள் குடும்பத்தார் 1962ஆம் ஆண்டு அர்ப்பணித்திருக்கிறார்கள்.

இனி இந்த மகாலுக்குச் செல்பவர்கள் ஒரு நிமிடம் நம் சேலத்திற்கு பெருமைத்தேடித்தந்த அந்த மாமனிதரைப்பற்றி ஒரு கணம் நினைத்துப்பாருங்கள்..!

உங்கள் மனதில் பெரும் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும்..!

நன்றி : ஈசன் டி எழில்விழியன் முகநூல் பதிவு