டில்லி

நேற்று அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அதை இயற்ற உதவிய 15 பெண்களில் இன்று சிலரைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய குழுவில் இடம்பெற்றிருந்த 15 பெண்களில் ஐவரைப் பற்றி நேற்று பகிர்ந்திருந்தோம்.  இன்றைய இரண்டாம் பகுதியில் மேலும் ஐவரைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

6.     கமலா சவுத்ரி : லக்னோவில் ஒரு பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த கமலா சவுத்ரி சிறுவயதில் கல்வி கற்க  அனுமதிக்கப்படவில்லை.  அத்துடன் அவருடைய குடும்பத்தினர் அப்போதைய பிரிட்டன் ராஜவம்சத்தினருக்கு தீவிர விசுவாசிகளாக இருந்த நிலையில்  இவர் அவர்களை மீறி சுதந்திரப் போராட்டத்தில் கலந்துக் கொண்டார்.   கடந்த 1930 ஆம் வருடம் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் இவர் முக்கிய பங்காற்றினார்.   அத்துடன் இவர் 54 ஆம் காங்கிரஸ் கூட்டத்தில் துணைத தலைவராக இருந்துள்ளார்.  மக்களவை உறுப்பினராகவும்  பதவி வகித்த இவர் புகழ்பெற்ற கதாசிரியை ஆவார்.   இவர் கதைகள் பெரும்பாலும் பெண்கள் முன்னேற்றம் குறித்தே அமைந்து இருக்கும்.

7.     லீலா ராய் : அசாம் மாநிலத்தில் 1900 ஆம் வருடம் பிறந்த லீலாராயின் தந்தை துணை நீதிபதியாக இருந்த போதிலும் தேசியவாத இயக்கத்துக்கு ஆதரவாக இருந்தவர் ஆவார்.  கடந்த 1921 ஆம் வருடம் இவர் பட்ட படிப்பை முடித்து பெண்கள் முன்னேற்றத்துக்கான சமூகப்பணியில் தன்னை இணைத்துக்கொண்டார்.  இவர் பல கல்விப் பணிகள் செய்துள்ளார்.  தற்போது வங்க தேசத்தில் உள்ள டாக்கா நகரிலும் கொல்கத்தாவிலும் பெண்களுக்கான பள்ளிகளைத் தொடங்கி நடத்தி உள்ளார்.  பல சத்தியாகிரகங்களில் பங்கெடுத்துள்ளார்.   நேதாஜி சுபாஷ் சந்திர போசின் ஆதரவாளரான இவரிடமும் இவர் கணவரிடமும் நேதாஜி நாட்டை விட்டுச் செல்லும்போது கட்சியின் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்தார்.

8.     மாலதி சவுத்ரி : தற்போது வங்கதேசமாக உள்ள பகுதி அப்போது கிழக்கு வங்கம் என அழைக்கப்பட்டது.   அந்த பகுதியின்  புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தவர் மாலதி சவுத்ரி,..    இவர் 16 வயதில் சாந்தி நிகேதனில் கல்வி பயின்றவர் ஆவார்.  இவர் கணவர் நபகிருஷ்ண சவுத்ரி ஒரிசா மாநில முதல்வராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.    இவரும் இவர் கணவரும் 1927 ஆம் வருடம் முதல் ஒரிசாவில் வசித்து வந்தனர்.  அவர்கள் இருவரும் காங்கிரசில் இணைந்து சத்தியாகிரக போராட்டங்களில் கலந்துமே கொண்டுள்ளனர்.    1934 ஆம் அண்டு நடந்த காந்தியின் ஒரிசா பாத யாத்திரையில் இவர் கலந்துக் கொண்டுள்ளார்.  இவர் ஒரிசா மக்களின் மேம்பாட்டுக்காக பலகுழுக்களை அமைத்துப் போராடி உள்ளார்.  இந்திரா காந்தி அவசரநிலை சட்டம் அறிவித்த போது அதை எதிர்த்து மாலதி சிறை சென்றுள்ளார்.

9.     பூர்ணிமா பானர்ஜி : உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் இந்திய தேசிய காங்கிரஸ் குழுவில் செயலராகப் பதவி வகித்த பூர்ணிமா பானர்ஜி 1930 மற்றும் 1940களில் நடந்த சுதந்திர போராட்டத்தில் முன்னிலை வகித்துள்ளார்.  இவர் சத்தியாகிரகம் மற்றும் வெள்ளையனே வெளியேறு போராட்டங்களில் கலந்துக் கொண்டு பலமுறை கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார்.    இவர் கிராமப்புற முன்னேற்றத்துக்காகப் பல பணிகளைப் புரிந்துள்ளார்.

10.  ராஜகுமாரி அம்ரித் கவுர் : உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 1889 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி பிறந்த அம்ரித் கவுர  இந்தியாவின் முதல் சுகாதார அமைச்சராக 10 ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்.  இவர் அரசகுடும்பத்தில் பிறந்தவர் என்பதால் ராஜகுமாரி என அழைக்கப்பட்டார். இங்கிலாந்தில் மருத்துவக் கல்வி பயின்ற அம்ரித் கவுர் அனைத்தையும் துறந்து காந்தியின் செயலராக 16 வருடம் பணி புரிந்துள்ளார்.   எய்ம்ஸ் நிறுவனரான இவர் அதன் சுயத்தன்மைக்காக பெரிதும் போராடியுள்ளார்.   மகளிர் கல்வி மற்றும் முன்னேற்றத்துக்காகப் பல பணிகள் ஆற்றி உள்ள இவரைத் தேச நலன் காணும் இளவரசி என  பல வெளிநாட்டுப் பத்திரிகைகள் புகழ்ந்துள்ளன.

 

அடுத்து வரும் பகுதியில் மீதமுள்ள ஐவரின் விவரங்களைக் காண்போம்.