அறிவோம் தாவரங்களை – கத்தாழை

கத்தாழை.(ALOE VERA)

பாரதம் மற்றும் ஆப்பிரிக்கா உன் தாயகம்!

கி.பி.17ஆம்   நூற்றாண்டில் பயன்பாட்டில் இருந்த பசுமை தாழை நீ!

கிரேக்கர்கள், ரோமானியர்கள் காயங்களுக்குப் பயன்படுத்திய பழமை மடல் நீ!

வேலிகளில் வரப்புகளில் வளர்ந்திருக்கும் தாழை நீ!

3 அடி வரை உயரம் வளரும் காயகல்ப செடி நீ!

குமரி, கன்னி, கத்தாழை  எனத் தமிழில் அழைக்கப்படும் அமிழ்து மடல் நீ!

சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, செங்கற்றாழை என 500க்கும்  அதிகமான வகைகளில் பரிணமிக்கும் மூலிகைத் தாவரம் நீ !

இந்தியா ,இத்தாலி, ஆப்பிரிக்கா, சீனா, வெனிசூலா என எங்கும் வளரும் தங்கத்தை தாவரம் நீ!

”….மாதவிடாயைச்  சீராக்கும் குமரி….”எனத் தேரையர் போற்றும் திரவிய செடி  நீ!

இருமல் ,சளி, குடல்புண் ஆகியவற்றுக்குச் சாறு  தருவாய்!

தீக்காயம்,  படை,படர்தாமரை, அரிப்பு, வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கு ஏற்ற இயற்கை மருந்துச் செடி நீ!

அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தில் ‘பாட்டம்’ நகரின்  அஞ்சல் தலையாய் அகிலம் சுற்றிய மஞ்சள் பூவழகி நீ!

மருந்து சாதனப் பொருட்களும் அழகுசாதன பொருட்களும் தயாரிக்க உதவும் அற்புத மருந்து தாவரம் நீ !

சித்தா, ஆயுர் வேதத்தின் சிறப்புத் தாவர மூலிகை நீ!

மூலிகை மருத்துவத்தில் முதன்மை  வகிக்கும் அலோவேறா நீ!

தோட்டங்களில் வீடுகளில் தொட்டிகளில் வளர்க்கப்படும் அலங்கார அழகுத் தாவரமே!

சாகுபடிக்கு ஏதுவான வேளாண் தாழையே!

ரோஜா இதழ் அமைப்பில் காட்சி தரும் ராஜத் தாவரமே!

சூட்டைத் தணிக்கும் நாட்டுச் செடியே!

மலத்தை இளக்கி விடும் மருந்துச் செடியே!

முகத்தை அழகாக்கும் மூலிகையே!

நீவிர் மூன்று தமிழ், முக்கனிகள் உள்ளவரை முனைப்போடும் விரைப்போடும் வாழியவே!

நன்றி :  பேரா.முனைவர். ச.தியாகராஜன் (VST)

நெய்வேலி.

📱9443405050