அமிர்தேஸ்வரர் கோயில், அமிர்தபுரம்

அமிர்தேஸ்வரர் கோயில்,  இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள அமிர்தபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. ஒரு அகன்ற திறந்த மண்டபத்துடன் கூடிய இக் கோயில் போசளர் கட்டிடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தென்னந் தோப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இக் கோயிலின், ஒரேயளவு இடைவெளிகளில் செதுக்கப்பட்டுள்ள வட்டவடிவச் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பழைய மதில் இன்றும் உள்ளது.

அமைவிடம்
சிக்மகளூரிலிருந்து 67 கி. மீ. தொலைவிலும், ஹசனிலிந்த்து 110 கி. மீ, தொலைவிலும், சிமோகாவிலிருந்து 35 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் ஹோய்சாள மன்னர் இரண்டாம் வீர வல்லாளனின் படைத்தலைவரால் துங்கபத்திரை ஆற்றங்கரையில் 1196ஆம் ஆண்டில் போசளர் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டது.
அமைப்பு
இக்கோயில் ஒரு விமானத்துடன் கூடியது. இது மூடப்பட்ட சிறிய மண்டபம் ஒன்றினூடாகத் திறந்த பெரிய மண்டபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நடுத்தர அளவினதாகிய இக் கட்டிடம், மண்டப அமைப்பிலும் அளவிலும், பேளவாடியில் உள்ள விஜயநகரக் கோயிலுடன் ஒப்பிடத்தக்கதாக உள்ளது. திறந்த மண்டபம் 29 தூண் இடைவெளிகளையும், மூடிய மண்டபம் 9 தூண் இடைவெளிகளையும் கொண்டுள்ளன.
இச் சிறிய மண்டபத்தின் ஒரு பக்கத்தில் அருகில் அமைந்துள்ள இன்னொரு சிறு கோயிலுக்குச் செல்வதற்கான வாயில் மண்டபம் ஒன்றும் உள்ளது. கோயில் கருவறை சதுர வடிவானது. சிற்ப வேலைப்பாடுகளால் அழகூட்டப்பட்ட பழைய விமானம் இன்றும் உள்ளது. சுவரின் அடிப்பகுதி பழைய ஹோய்சாலப் பாணியில் அமைந்துள்ளது.
கோயிலின் நவரங்க மண்டபம்
இக் கோயில் கட்டிடத்தின் சிறப்பு மண்டபக் கூரையைத் தாங்கி நிற்கும் மினுமினுப்பான தூண்கள் ஆகும். மண்டபத்தின் கூரை கொடி வேலைப்பாடுகளுடன் கூடிய பல குழிந்த மாட அமைப்புக்களைக் கொண்டதாக உள்ளது. பெரிய மண்டபத்தின் வெளிப்புறத் தடுப்புச் சுவர்களில் 140 சிற்பப் பலகைகள் காணப்படுகின்றன.
இவற்றில் இந்து இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.
பல ஹோய்சாலக் கோயில்களில் காணும் நுண்ணிய சிற்பங்களைக் கொண்ட சிறிய சிற்பப் பலகைகள் போலன்றி இவை பெரியவையாக உள்ளன. தென் புறச் சுவரில் காணப்படும் 70 கற்பலகைகளில் இராமாயணத்தில் இருந்து காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. வழக்கத்துக்கு மாறான முறையில் கதை நகர்வு வலமிருந்து இடமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வடபுறச் சுவரில் கதைத் தொடர்ச்சி இடமிருந்து வலமாகவே உள்ளது. மீதமுள்ளவற்றில் 25 பலகைகளில் கிருஷ்ணனுடைய வாழ்க்கைக் காட்சிகளும், 25 பலகைகளில் மகாபாரதக் காட்சிகளும் செதுக்கப்பட்டுள்ளன.
புகழ் பெற்ற ஹோய்சாலச் சிற்பியும் கட்டிடக் கலைஞருமான ருவாரி மலிதம்மா இக் கோயிலின் மண்டபக் கூரைச் சிற்பங்களில் பணிபுரிந்ததன் மூலமே தனது தொழிலில் காலடி வைத்ததாகச் சொல்லப்படுகிறது.  Karnataka,