சரும நோய் தீர்க்கும் சந்திரசேகர சுவாமி
தமிழகத்தின் முதுகெலும்பாக விளங்கும் காவிரி ஆற்றின் தென் பகுதியில் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாக திகழ்கிறது, திருச்செந்துறை கிராமத்தில் அமைந்துள்ள சந்திரகேரர் ஆலயம். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பப்பட்ட ஒரு புண்ணிய ஸ்தலம் பல சிறப்புகளை தன்னுள் அடங்கியுள்ளது.
இந்த கோவில் திருச்சியிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு பகுதியில் கரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வந்து வணங்குபவர்களுக்கு குழந்தை பாக்கியம், தீராதநோய் தீர்க்கும் வல்லமை, இழந்த செல்வத்தை மீண்டும் பெறும் வாய்ப்பு உள்ளிட்ட கிடைக்கும் என்று புராண நூல்களில் குறிக்கப்பட்டுள்ளன. அதனால் இந்தக் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பலா மரத்தில் சிவன்
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் பாட்டனார் திருச்சி உறையூரை தலைநகரமாக கொண்டு ஆண்டு வந்தார். காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. பவுர்ணமிக்கு 8 தினங்களுக்கு முன்னர் அந்தி பொழுதில் அமைச்சர்கள் மற்றும் படைவீரர்கள் புடை சூழ காடுகளில் திருடர்களை பிடிக்க மன்னர் செல்வது வழக்கம். அந்த இடம் முழுவதும் பலாமரக் காடாக இருந்தது. மன்னர் தன் படைகளுடன் வந்த போது, அங்கு திருடர்கள் யாரும் இல்லை. அதற்கு மாறாக மான்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையடுத்து மன்னனுக்கு மான்களை வேட்டையாடும் எண்ணம் தோன்றியது. அப்படி வேட்டையாடும் போது, ஒரு மான் அங்கிருந்து பெரிய மரப்பொந்தில் ஒளிந்து கொண்டது. மன்னன் எய்த அம்பு, குறி தவறி பலாமர பொந்தில்பட்டு, அம்பு பட்ட அந்த இடத்தில் பலா மரப்பாலுக்கு பதிலாக ரத்தம் பீறிட்டது.
அந்த நேரத்தில் ஒரு அசரீரி ஒலித்தது. சிவபெருமான் சுயம்பு ரூபமாக அந்த மரத்தின் அடியில் உள்ளதாகவும், அங்கு ஒரு சிவாலயம் அமைக்குமாறும் முதலாம் பராந்தக சோழனுக்கு கட்டளையிட்டது. மான் மாயமானது. வில் அம்பை மன்னர் கீழே போட்டுவிட்டு, சிவபெருமான் இருக்குமிடத்தில் உயிர்வதை செய்ய வந்துவிட்டோமே என்று நினைத்து வருந்தினான். பின்னர் அரண்மனை சன்று செப்பு தகட்டில் இந்த நிகழ்வை பதிவு செய்தார். அரண்மனையில் இருந்து 13 மைல் தூரத்தில் மேற்கே திருச்சி – கரூர் காட்டு பகுதியில் சிவாலயம் அமைக்க வேண்டும் என்ற அந்தப் பதிவு தகடு, தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகாலின் அரசால் இன்றும் பாதுகாப்பாக மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவில் அமைக்கும் பணி
மன்னன் எவ்வளவோ முயற்சி செய்தும் சிவனை கண்ணால் பார்க்கும் பாக்கியமோ, சிவாலயம் அமைக்கும் பாக்கியமோ கிடைக்கவில்லை. அவர் ஆண்ட பகுதியில் கோவில் கட்ட மலைகள் இல்லாத காரணத்தினால் நிறைவேற்ற முடியவில்லை. அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த பூதி ஆதிச்சம்பிடாரி என்ற பெரியகுந்தவை நாச்சியார், இறைவனுக்கு கோவில் கட்டும் பணியை கையில் எடுத்தார். தன்னுடைய எல்லைக்கு வெளியே அமைச்சர்களை அனுப்பி மேற்கு திசையில் முசிறி, தொட்டியம், நாமக்கல், பகுதியிலுள்ள மலைகளிலிருந்து, கல்லெடுப்பதற்கு அந்த பகுதி சாளுக்கிய மன்னனிடம் அனுமதி பெற்றார். பின்னர் அங்குள்ள சிறைக்கைதிகளையும், சோழ மண்டலத்தில் உள்ள சிறை கைதிகளையும் வைத்து கருங்கல் பாறைகளை பெயர்த்து யானைகள் மூலமாக இங்கு கொண்டுவந்தார். இதையடுத்து சுமார் 617 நாட்களில் சிவனுக்கும், சக்திக்கும் ஆலயங்கள் அமைத்து குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்த ஆலயம் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது.
பவுர்ணமி தினத்தில் பராந்தகசோழனுக்கு அசரீரி ஒலித்ததால் சந்திரசேகரஸ்வாமி என்று இறைவனுக்கு பெயர் சூட்டப்பட்டது. இத்தல அம்மனின் திருநாமம் மானேந்திய வல்லி என்பதாகும். மானும், மழுவும் சிவனுக்குதான் ஆயுதம். இந்தியா முழுவதும் அம்மன் தாமரை பூவும், தாமரை மொட்டும் தான் கையில் தாங்கி காட்சியளிக்கிறாள். ஆனால் இங்கு மட்டும் தான் சிவனின் ஆயுதத்தை தாங்கி அர்த்தனாரியாய் அம்மன் காட்சி தருகிறாள்.
இத்தல சிவபெருமானின் உருவம் பலாப்பழத்தின் மேல் முள் போன்றும், வேர் முடுச்சுக்களும் நிறைந்து காணப்படுகின்றன. சிவனின் முகத்தில் ஈசானதிக்கிலும், தென் கிழக்கு திக்கிலும் சிவனின் ருத்ரத்தை தனிக்கும் வண்ணம் இரண்டு சூலங்கள் தாங்கி சாந்தமாக காட்சி தருகிறார். சிவனின் உருவம் கரடுமுரடாக இருப்பதால் சந்திரசேகரனுக்கு உகந்த தினமான திங்கட்கிழமை 8 வாரம் நெய் தீபம் ஏற்றி சிவனின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்ட விபூதியை உடலில் பூசிக்கொண்டால், உடலின் மேல்புறம் உள் புறம், உள்ள தீராத மேகநீர் சருமநோய்கள் நீங்கும் என்று நாடி ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அம்மன் அர்த்தநாரியாக காட்சியளிப்பதால் நினைத்த காரியம், திருமணம், தொழில்வெற்றி, புத்திர பாக்கியம், தொலைந்த செல்வங்கள் மீளும் பாக்கியம் கிடைக்கும் என்று அகத்திய விஜயம் நூலில் சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ளன. சுற்றுபுற சுவர்களில் நிலமளந்த கோல் என்ற அளவு முறைகள் மற்றும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவம் வீர விளையாட்டுக்கள், ஒற்றுமைக்கான தத்துவங்கள், எழுத்து வடிவிலும், சித்திரவடிவிலும் சொல்லப்பட்டுள்ளன. சிவனின் விமானமானது பாதி அளவு கருங்கல்லாலும், மீதமுள்ளது சுதை வடிவிலும் சித்திரங்கள் உயிரோட்டத்துடன் மின்னுகின்றன. ராஜகோபுரமானதுபஞ்ச பூத சக்திகளை உணர்த்தும் வண்ணம் ஐந்து நிலைகளாக அமைக்கப்பட்டுள்ளன. கோபுரத்தில் மிக விசேஷமாக சதுஷ்காதேவி ஐந்து முகங்களும் பத்து கரங்களையும் கொண்டு சிறப்பாக உள்ளது. மேலும் சரபேஸ்வரர் உருவமும், நரசிம்மன் ஹயக்கீரிஸ்வரர் உருவங்களும் சிறப்பாக உள்ளன. இந்த திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெரிய சுற்றுப்பரப்பையும் தெருவுடன் சேர்த்து மூன்று பிரகாரங்களும் உள்ளன. பொது மக்கள் ஒத்துழைப்புடன் எல்லா வைபவங்களும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2001–ம் ஆண்டுக்கு பிறகு 19 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு விழா 30.01.2020ல் நடைபெற்றது.