வித்தியாசமான தேவி பட்டினம் நவக்கிரக கோவில்
இராமநாதபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது தேவி பட்டினம்.
இவ்வூரில் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள திலகேஸ்வரர் கோயில் சிவனுக்காகவும், கடற்கரை ஓரம் கடலடைத்த இராமர் கோயில் திருமாலுக்காகவும், படையாச்சி தெருவில் உள்ள உலகம்மன் ஆலயம் அம்மனுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளன.
கடலடைத்த இராமர் கோயிலுக்கு எதிரில் கடல் நடுவே அமைந்துள்ள நவபாஷாணம் எனப்படும் நவக்கிரகங்கள், பாவங்கள் நீங்கவும், முன்னோர் வழிபாட்டிற்கும் மக்களால் வழிபடப்படுகிறது.
இவ்வூர் இராமாயணத்தோடு தொடர்புடையது. இராமபிரான் இலங்கைக்குச் செல்லும் முன்னர் உப்பூரில் விநாயகரை வழிபட்டுவிட்டு, இங்கு கடலிலே ஒன்பது கற்களை ஒன்பது கோள்களாகப் பாவித்து வழிபட்டபோது கடல் அலைகள் குறுக்கிட்டதால், விஷ்ணுவை வேண்டினார் என்றும், பின்னர் கடல் அலைகள் அமைதியடைந்தன என்றும் புராணங்கள் கூறுகின்றன. இதனால் இங்குள்ள திருமால் கடலடைத்த இராமர் என அழைக்கப்படுகிறார். இக் கடலடைத்த இராமர் கோயில் நவகிரகத்துக்கு எதிரில் உள்ளது.
இந்தியா முழுவதிலுமுள்ள 52 சக்தி பீடங்களில் இந்த ஊரில் உள்ள உலகம்மன் ஆலயமும் ஒன்றாகும். இது கடற்கரை ஓரத்தில் மிக அமைதியான சூழலில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
தேவி பட்டினத்தை கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டும் கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஜடாவர்மன் விக்கிரம பாண்டியன் கல்வெட்டும் முறையே இளங்கோ மங்கலமாகிய உலக மாதேவிப்பட்டினம் என்றும் புறக்குடி ஆகிய ஸ்ரீவல்லபட்டினம் என்றும் குறிப்பிடுகின்றன.
கி.பி. 1533 ஆம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டு தேவி பட்டினத்தை தேவி பட்டினம் என்றே குறிப்பிடுகின்றது. இம்மூன்று கல்வெட்டுகளும் தேவி பட்டினம் செவ்விருக்கை நாட்டில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன.
முதலாம் இராஜராஜ சோழனின் பட்டத்து அரசியான லோக மகா தேவியின் பெயரில் இவ்வூர் அமைக்கப்பட்டதாகக் கூறுவர். உலக மகா தேவி பட்டினம் என்பது நாளடைவில் தேவி பட்டினம் என வழங்கப்பட்டு வருகிறது.
கோபுரத்தை சிறியதாகவும், விமானத்தை பெரியதாகவும் அமைப்பது சோழர் கால கட்டிடக்கலை. இவ்வூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள திலகேஸ்வரர் கோயில் விமானம் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளதால் அது சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இங்கு கடலடைத்த இராமர் கோயில் உள்ளது. இது நவகிரகத்துக்கு எதிரில் உள்ளது.
இவ்வூரின் பெயரோடு தொடர்புடைய உலகம்மன் (உலகமாதேவி) கோயில் படையாச்சி தெருவில் உள்ளது. பட்டினம் என்பது கடற்கரையோரம் உள்ள நகரைக் குறிக்கும் சொல்.
தேவி பட்டினம் கடற்கரையின் சதுப்பு நிலப் பிரதேசத்தில் அலையாத்தி காடுகள் காணப்படுகின்றன. இவ்வகை அலையாத்தி காடுகள் இவ்வூர் முதல் கிழக்கு கடற்கரை முழுவதும் பரவி உள்ளது.
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். இதில் என்ன வித்தியாசம் என்றால் இந்த நவக்கிரக கோவில் கடலில் உள்ளது.
இந்துக்களின் நம்பிக்கையின் படி சூரியனைச் சுற்றும் ஒன்பது கோள்களும், இவ்வுலகில் வாழும் மக்களின் விதியை தீர்மானிக்கின்றன. அந்த ஒன்பது கோள்களை வழிபடத் தமிழகம் முழுவதும் ஏராளமான கோவில்கள் இருந்தாலும், இந்த நவக்கிரக கோவில் மிகப் பிரசித்தி பெற்றது. வால்மீகி இராமாயணத்தின் கதாநாயகனான ஸ்ரீராமபிரான் எழுப்பிய கோவிலாகும் இது.
இந்த கோவிலின் அருகே கடற்கரையில் திலகேஸ்வரர் கோவிலும் உள்ளது. இங்கு சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சியளிக்கின்றனர். இந்தக் கோவிலுக்கு நவபாஷனக் கோவில் என்று ஓர் பெயரும் உள்ளது.
இங்கு நவதானியங்களைக் கொண்டு மக்கள் பூஜை செய்கின்றனர். அமாவாசை தினங்களில் ஏராளமானோர் குவிந்து அவர்களின் மூதாதையர்களையும் வழிபடுகின்றனர். ஆடி அமாவாசை தினத்தன்று இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை நடத்துகின்றனர்.
இராமருக்கு சனி தோஷம் நீங்கியதால், இங்கு வழிபட்டால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். மேலும் இந்தக் கோவில் மூதாதையர்களை வழிபட மிகச்சிறந்த இடமாகக் கருதப்படுகிறது.