பூமிக்கு அடியில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட அதிசய கோவில் பற்றி தெரியுமா?
இந்தியாவில் பல விசித்திரமான கோவில்களை நாம் பார்த்ததுண்டு. அந்த வகையில் கிட்டதட்ட 1200 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு அதிசய குகை கோவிலை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பேரூராட்சியில் அமைந்துள்ளது வெட்டுவான் கோவில். ஊரின் மையப் பகுதியிலிருந்து கிட்டத் தட்ட 1 கி.மீ. தொலைவில் அந்த ஊரின் பெயரை கொண்ட மலையில் அமைந்துள்ளது இந்த கோவில்.
கி.பி. 800 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த கோவில் ஒரே பாறையால் செதுக்கப்பட்டுள்ளது. கழுகுமலையில் ஏறி நடந்து செல்லும்போது இக்கோயில் கண்ணுக்குத் தெரியாது. காரணம் இது சற்று தாழ்ந்த தளத்தில் சுமார் 10 அடி இறக்கத்தில் அமைந்துள்ளது.
ஒரு மிக பெரிய பாறையை கிட்டதட்ட 7.5 மீட்டர் ஆழத்திற்குச் சதுரமாக வெட்டியெடுத்து அதன் நடுப்புறத்தை அக்காலத்திலேயே கோயிலாகச் செதுக்கியுள்ளனர். சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இந்த கோவிலின் பனி ஏனோ முழுமையாக நிறைவடையவில்லை. சிகரம் மட்டுமே முற்றுப்பெற்றுள்ள நிலையில் கருவறையில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
கோவில் விமானத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு நந்தி சிலைகள் உள்ளன. அதோடு இந்த கோவிலில் உமாமகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோரின் சிற்ப வடிவங்களும் உள்ளன. இந்த கோவில் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவிலை போன்று உள்ளது. கைலாசநாதர் கோவிலும் ஒரே பாறையைக் கொண்டு செதுக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கழுகுமலை வெட்டுவான் கோவில் உருவானதற்கு ஒரு புராணக் கதை செவிவழியாக கூறப்படுகிறது. பாண்டிய நாட்டில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பியின் கதை தான் இது. ஒரு கல்லினை சிலையாக மாற்றி அதற்கு உயிர் கொடுக்கும் வித்தையை கற்றவர் இந்த சிற்பி. சிற்பியும், சிற்பியின் மகனும் ஒரு நாள் கோவில் திருவிழாவிற்குச் சென்றிருந்தனர். அந்தத் திருவிழாவில் தன் மகனைச் சிற்பி தொலைத்து விட்டார். பல இடங்களில் தேடியும் தன் மகன் கிடைக்கவில்லை.
நாட்கள் கடந்து விட்டன. மகனை இழந்த சிற்பி, ‘அரைமலை’ என்று அழைக்கப்படும் இந்த கழுகுமலைக்கு வந்து தன் சிற்ப வேலையைத் தொடங்கினார். சமணத் துறவிகளுக்குத் தேவைப்பட்ட சிலைகளைச் செய்து கொண்டு தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வந்தார்.
அருகிலுள்ள இடத்தில் மலையில் ஒரு சிறுவன் அழகாகச் சிலைகளை வடித்துக் கொண்டிருப்பதைக் கண்ட மக்கள், சமணர் சிலைகளைச் செய்து கொண்டிருந்த சிற்பியிடம் வந்து ‘அங்கு சிறுவன் ஒருவன் ஒரே கல்லில் சிலைகளை வடித்துக் கொண்டிருப்பதைப் பார், எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா.’ என்று பலர் அந்த சிறுவனைப் பாராட்டி இந்த சிற்பியிடம் கூறிக்கொண்டே இருந்தனர்.
இப்படி அந்த சிறுவனுக்குப் பாராட்டுக்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இதனால் கோபமடைந்த சிற்பி, அந்தச் சிறுவனைக் காணச் சென்றார். சிறுவன் சிலையைச் செதுக்கிக் கொண்டிருப்பதைப் பின்புறமாக நின்று பார்த்த சிற்பி, கையில் வைத்திருந்த உளியால் சிறுவனைத் தாக்கினார். உடனே அந்த சிறுவன் வலி தாங்க முடியாமல் ‘அப்பா’ என்று கத்தியபடி கீழே விழுந்தான். அந்த குரலைக் கேட்டதும் சிற்பி ஓடி வந்து சிறுவனைத் தாங்கி பிடித்தான். அந்த சிறுவனின் முகத்தைப் பார்த்த சிற்பி அதிர்ச்சியில் உறைந்து போனார். திருவிழாவில் காணாமல் போன தன் மகன் தான் அவன் என்பதை உணர்ந்தார்.
பிறகு தன் மகன் ஒரே கல்லில் செதுக்கிய சிற்பத்தைக் கண்டு திகைத்துப் போனார். தன் கையால் காயப்படுத்திய மகனே தூக்கி, தனது மடியில் போட்டுக்கொண்டு புலம்பினார். தன் மகன் என்று தெரியாமலேயே இந்த சிறுவனைக் காயப்படுத்திய சிற்பி, தன் மகன் இறந்ததற்கு தான்தான் காரணம் என்று அழுது புலம்பினார்.
அந்த சிறுவன் இறந்து விட்டதால் தான் இந்த கோவில் பணிகள் பாதியிலேயே நின்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கோவிலுக்கு ‘வெட்டுவான் கோவில்’ என்ற பெயர் இதனால் தான் வந்ததாக அந்த ஊர் மக்கள் கூறுகிறார்கள். இந்தக் கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த கோவிலின் பணிகள் பாதியிலேயே நின்றிருந்தாலும், தந்தை-மகன் பாசத்தைத் தாங்கி இன்றும் இந்தக் கோயில் உயிரோடுதான் இருக்கின்றது.