சபரிமலை பெரிய பாதையின் மகத்துவம் – மூன்றாம் பகுதி

சபரிமலையில் பெருவழியில் உள்ள கேந்திரங்களைப் பற்றித் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.   இந்த மூன்றாம் பகுதியில் காளைகட்டி ஆசிரமம்,  அழுதா மலை மற்றும் அழுதா நதி குறித்துக் காண்போம்

காளைகட்டி ஆசிரமம் 

இந்த இடத்துக்கு காளைகட்டி ஆசிரமம் எனப் பெயர் வர இது சிவபெருமான் நந்தியைக் கட்டி வைத்த இடம் என்று காரணம் கூறுவதுண்டு; ஆனால் அது சரியல்ல;  நந்தியென்ற உயர் சிவ கணத்தை எதற்குக் கட்டி வைக்க வேண்டும்? ஓடிப்போக அவர் என்ன நம் வீட்டுக் காளையா?) உண்மை என்னவென்றால், இந்த இடத்தின் அதிஷ்டான தேவதை நந்திகேச்வரன் ஆவார். அவர் சைவ தர்ம சுரக்ஷிதனான சாஸ்தாவின் கணங்களில் அவரும் ஒருவர். அகவே அவரை வணங்கி அவரது அனுமதியுடன் யாத்திரையைத் தொடர வேண்டும்.

அழுதை மலை ஏற்றம் இறக்கமும் அழுதை நதியும்

ஐயப்பன் ”பந்தள பூபாலன் கருணா வருணாலயன் அலஸையில் விலஸும் ஈசன்” என்று போற்றப்படுகிறான்.  புராணகாலத்தில் அலஸா என்று அழைக்கப்பட்ட நதியே இன்றைய அழுதை நதி ஆகும்.  பம்பையின் ஒரு கிளை நதியான அழுதையில் ஸ்நானம் செய்து அழுதை மலையை ஏறிக் கடக்க வேண்டும். அழுதையில் முழுகும் போது முதலில் நமது காலில் கிடைக்கும் கல்லை எடுத்துக் கொண்டு மடியில் காப்பாற்றி வைப்பது வழக்கம். அழுதை ஸ்நானம் செய்து இருமுடியைத் தலையில் வைக்கும் முன்பு குருநாதரை வணங்கி தக்ஷிணை கொடுத்து நமஸ்கரிக்க வேண்டும்.

அடுத்த கேந்திரங்களைக் குறித்து அடுத்தடுத்த பகுதிகளில் காண்போம்.