கேது பகவான் பற்றி சில தகவல்கள்

தேவர்களும், அசுரர்களும் இறவா வரம் அருளும் அமிர்தத்தை பெற வேண்டி திருமாலின் யோசனைப்படி திருப்பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து வந்த அமிர்தத்தை, உலகத்தைக் காக்க உதவும், நல்லவற்றைச் செய்யக் கூடிய தேவர்களுக்கு மட்டும் தர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் , திருமால் மோகினி அவதாரமெடுத்து, அமிர்தத்தைத் தேவர்களுக்கு மட்டும் கிடைக்கும் வகையில் லீலை செய்தார்.

அதை அறிந்த ஓர் அசுரன் தேவர்களைப் போல் உருமாறி அமிர்தத்தைப் பருகினான். இதைக் கண்டு கொண்ட சூரிய சந்திரர்கள். நாராயணனிடம் கூற, அவர் தன் சக்கரத்தால் அந்த அரக்கனின் தலையைச் சீவினார்.

பின் அமிர்தத்தைக் குடித்த சக்தி அவரிடத்தில் இருந்ததால் தேவர்களின் அருளால் அந்த தலைப் பகுதி கேதுவாகவும், உடல் பகுதி ராகுவாக மாற்றப்பட்டு நவக்கிரகங்களில் இருவராக மாற்றப்பட்டது.

மனிதனுக்குக் கர்மத்தை உபதேசிக்கக் கூடியவராகக் கேது விளங்குகிறார்.

தன்னை யாராலும் வெல்ல முடியாது. தன் திறமையால் எதையும் செய்துவிடுவேன் என அகம்பாவம் கொண்டால் அது கேதுவாகிறது.

எல்லா சக்திக்கும் மேல் ஒரு இறை சக்தி உள்ளது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். இருப்பினும் சில சமயங்களில் யாருடைய தயவும் தேவையில்லை என நினைப்பதால் ஏற்படக் கூடிய பலன்களைத் தருவது கேது. இறை சக்தியை நாடச் சொல்லி உணர்த்தக் கூடியது கேது.

இதே போல் கேது நம் ராசி அல்லது லக்கினத்தில் வரும் போது, வாழ்வில் இருக்கும் நல்ல பாக்கியங்களைப் பறித்து, இருள் எனும் தனிமையில் விட்டுவிடுவார்.

அதோடு மனிதனின் பாவ புண்ணிய கணக்குகளின் அடிப்படையில், நம்மை உணர வைத்து நாம் சிறப்பான நிலையை அடை பல மாற்று வழிகளைக் காட்டுவார் கேது பகவான்.

நீதியை உணர்த்தும் கேது :-

கேதுவின் இறுதிக்கட்ட பிடியின் போது நான் என்ற அகந்தை எண்ணத்தை நீக்கி, நாம் என்ற உயர்ந்த எண்ணத்தைத் தர வல்லவர்.

நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என்பதை உணர வைக்கக் கூடியவர். அந்த சக்தியை நாம் ஆராயாமல் இந்த உலகத்தில் நாம் வாழ முடியாது. அதனால் தெய்வ சக்தியை நாம் நம்ப வேண்டும். எந்த நிலையிலும் ஒரு தேடல் இருக்க வேண்டும்.

இப்படி உலக நீதியை உணர வைப்பவர் கேது பகவான்.