பாபங்களும் தோஷங்களும் போக்கும் சாமவேதீஸ்வரர் திருக்கோவில்

திருமங்கலம்  பாபங்களும் தோஷங்களும் போக்கும் சாமவேதீஸ்வரர் திருக்கோவில் பற்றிய ஓர் பதிவு :-

திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலம் அருள்மிகு சாமவேதீஸ்வரர் ஆலயம்.

இறைவன் அருள்மிகு உலக நாயகி சமேத சாமவேதீஸ்வரர் ஆலயம்.

இறைவன் சாமவேதீஸ்வரர் லிங்க ஸ்வரூபியாக அருள் பாலிக்கிறார். பிரகாரத்தின் தென் திசையில் பரசுராமர் பூஜை செய்த லிங்கமும்,ஆனாய நாயனாருக்கு முக்தி கொடுத்த ஸ்தலம் என்பதால் அவருக்கு முக்தி கொடுத்த சிவலிங்கமும் உள்ளது.

ஆனாய நாயனாருக்கு முக்தி கொடுத்த அம்மனின் சன்னிதியும் இங்கு உள்ளது.

மூன்று கோடி சிவலிங்கத்தைத் தரிசனம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன் திருமங்கலம் சாமவேதீஸ்வரரை தரிசித்தால் கிடைக்கும் என்கிறது புராணம் ‌.‌

*மாத்ரு ஹத்தி, பித்ரு ஹத்தி, பதி ஹத்தி தோஷ நிவர்த்தி ஸ்தலம் ஆகும்*

வடக்குப் பிரகாரத்தில் அப்பர், சம்பந்தர், ஆனாய நாயனார், பாணலிங்கம், சண்டிகேஸ்வரர் ஆகியோர் திருமேனிகள் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர். சண்டிகேசுவரர் தனிச் சன்னிதியில் வடக்கு பிரகாரத்தில் வீற்றிருக்கிறார்.

கிழக்கு பிரகாரத்தில் பைரவர், காலபைரவர், சூரியன், சனீஸ்வரன் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

பரசுராமர் தனது தாயைக் கொன்றதால் மாத்ருஹத்தி எனும் தோஷம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். அவரது தோஷம் நீங்கியது. இதனால் இங்குள்ள தீர்த்தம் பரசுராம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊருக்கு பரசுராமேஸ்வரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

சண்டிகேசுவரர் தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட பித்ருஹத்தி தோஷம் நீங்கப் பல ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டார். அவரைப் பற்றிய தோஷம் நீங்க வில்லை. இறைவன் இத்தலத்தில் வந்து தன்னை வணங்கும்படி கூற சண்டிகேசுவரரும் இறைவனின் சன்னிதியின் இடது புறம் இருந்து இறைவனை வணங்கினார். அவரது தோஷம் விலகி இறைவனடி சேர்ந்தார்.

இறைவனின் அர்த்தமண்டப நுழைவு வாசலில் சண்டிகேசுவரரின் திருமேனியை நாம் காணலாம். இது வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பம்சம் ஆகும்.

இங்குக் கிழக்கு பிரகாரத்தில் தனிச் சன்னிதியில் அருள் பாலிக்கும் முருகப் பெருமானுக்கு, ஆறுமுகமும் 12 கரங்களும் இல்லை. மாறாக ஆறு முகமும் நான்கு கைகளுமாகப் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். முருகன் வள்ளியை மணந்தபின் இத்தலம் வந்ததால் முருகனும் தேவசேனாவும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க, வள்ளி மட்டும் மயிலின் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது இந்த ஆலயத்தில் ‌ஓர் அற்புத காட்சியாகும்.

இங்கு அருள்பாலிக்கும் தக்ஷணாமூர்த்தி வழக்கம் போல் சின்முத்திரை காட்டாமல் அபய முத்திரை காட்டுகிறார். இது ஓர் அபூர்வ அமைப்பு ஆகும். இதனால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு இறைவன் தோஷ நிவர்த்தி தருவதுடன் கல்வி செல்வத்தையும் வாரி வழங்குகிறார் என பக்தர்கள் நம்புகின்றனர்.

சனி பகவானின் வாகனம் காகம். பொதுவாக காகம் தெற்கு நோக்கி இருப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள சனி பகவானின் வாகனம் வடக்கு திசை நோக்கி அமைந்திருப்பது ஓர் அபூர்வ அமைப்பாகும். ஜென்ம சனி, பாத சனி, அஷ்டமசனி ஆகியவை இங்குள்ள சனி பகவானை வழிபடுவதால் விலகி ஓடும் என்பது அனைவரும் அறிந்த நிஜம்.

இந்த ஆலயத்தில் பைரவரும், கால பைரவரும் சேர்ந்து இருப்பது ஓர் அற்புதமான அமைப்பாகும். அர்தஜாம பூஜையின் போது பைரவர் பாதத்தில் வைத்த விபூதியைப் பூசுவதால் சகலவிதமான பில்லி சூனியம் நோய்களும் குணமாகும் என்பது நிதர்சனம்.

மகம் நட்சத்திரத்தன்றும் சனிக்கிழமையன்றும் இக்கோவிலை 11 முறை வலம் வந்து, தேனில் ஊறிய பலாச் சுளைகளை தானம் செய்தால் நோயற்ற வாழ்வுடன் நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது இந்த ஊர் மக்கள் சொல்லும் நம்பிக்கையான செய்தி.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் 14 ஆவது நாயன்மார் ஆனாய நாயனார் ஆவார். அவர் அவதரித்த தலம் இது. கார்த்திகை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் இறைவனுடன் இரண்டறக் கலந்தார் ஆனாய நாயனார். அந்த நாளை எம்பிரான் ஆனாய நாயனார் குரு பூஜையாக அனுஷ்டிக்கப் படுகிறது.

அனைவரும் இந்த சிறப்பு வாய்ந்த திருமங்கலம் அன்னை உலக நாயகி உடனுறை சாம வேதீஸ்வரரர் திருவருள் பெறுக.