அறிவோம் தாவரங்களை – உதியன் மரம்

உதியன் மரம். (Lannea coromandelica)

பாரதம் உன் தாயகம்!

முந்திரி மரம் உன் தம்பி மரம்!

உலவை, ஓதியான், ஒடியன், ஒதிய மரம், சாம்பல் மரம் எனப் பல்வேறு பெயர்களில் விளங்கும் நல் மரம் நீ!

தொல்காப்பியத்தில் நீ ‘உதி’மரம்(1:2:243)!’

ஒதிதான்பெருத்தென்ன’என குமரேச சதகம் குறிப்பிடும் சரித்திர மரம் நீ!

சித்த மருத்துவத்தில் பயன்படும் சிறப்பு மரம் நீ!

தீக்குச்சி தயாரிக்க உதவும் திவ்ய மரம் நீ!

பெரும்பாடு, வீக்கம், புரையோடிய புண்கள்,  ஆண்மை வீரியம், ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

கி.பி.18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் தாவரவியல் அறிஞர் ராக்ஸ்பர்ட்  அவர்களால் ஒடைனா (odina),  ஒடியர் (wodier) எனப் பெயர் சூட்டப்பட்ட உன்னத மரம் நீ!

மரப்பட்டைகள்,   விசைப் பலகை,  வண்டிச்சக்கரம், ஏர் கலப்பை, உலக்கை,  சட்டகம், கரிக்கோல்,  பல் குச்சிகள், காகிதம் தயாரிக்கப் பயன்படும் மரம் நீ!

‘ஒதிய மரம் தூண் ஆமோ ஓட்டால் கிளிஞ்சல் காசாமோ?’  ‘ஒதியன் பெருத்து உத்திரத்துக்கு      ஆகுமா’? ‘ஒன்றுக்கும் ஆகாத உதியன்’ என உன்னை இகழ்வார்க்கும் இனியன செய்யும் இனிய மரமே!

பறவைகள்,அணில்கள் ஆகியவற்றிற்கு பழம் தரும் உணவு மரமே!

திருமண விழாவில் அரசாணிக் கால் மரமே!

‘ஜிங்கான்’ கோந்து தரும் இனியமரமே!

அடுப்புக்கு விறகு தரும் அரிய மரமே!

கால்நடைகளுக்கு இலவச இலை உணவு தரும் கொடை மரமே!

பூமியைக் குளிர்ச்சியாக்கும் புனித மரமே!

மண்புழு, மரவட்டை பெருக்கத்திற்கு இலைகளை உதிர்க்கும் இனிய மரமே!

அதிக இலைகளை உடைய அதிசய மரமே!

திராட்சைப் பழம் போன்ற கனிகளை உடைய திவ்ய மரமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர்.

ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.