உச்சி முதல் பாதம் வரை நகைகளுடன் மதுரை அரசாளும் மீனாட்சி…… 

உச்சி முதல் பாதம் வரை நகைகளுடன் மதுரை அரசாளும் மீனாட்சி…… 
இன்று 14.08.2020 ஆடி மாதம் 30ம் தேதி, வெள்ளிக்கிழமை…… 
தசமி திதி (மதியம் சுமார் 11.48 வரை)……. 
மிருகசீரிஷம் நட்சத்திரம்……. 
வேதாத்திரி மகரிஷி பிறந்தநாள்……. 
 
ஆடி மாத கடைசி சிறப்பு வெள்ளியான இந்த இனிய நாளில்,  உச்சி முதல் பாதம் வரை நகைகளுடன் மதுரை அரசாளும் மீனாட்சி அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்க மனதார வேண்டுகிறோம்.
 
(அம்மனுக்காக மன்னர்கள், வெளிநாட்டினர், பக்தர்கள் அள்ளிக் கொடுத்த முத்துக்கள் பதித்த தங்க, வைர, வைடூரிய நகை குவியல்கள் விபரம் கீழே)  
உச்சி முதல் பாதம் வரை நகைகளுடன் மதுரை அரசாளும் மீனாட்சி……
 
மதுரை: உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்  அம்மனுக்காக  மன்னர்கள், வெளிநாட்டினர், பக்தர்கள் அள்ளிக் கொடுத்த முத்துக்கள் பதித்த தங்க, வைர, வைடூரிய நகை குவியல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை பற்றி  வாசகர்கள் தெரிந்து கொள்வதற்காக இங்கே வழங்கி உள்ளோம்.அதிசயங்களே அசந்து நிற்கும் ஆயிரம் அற்புதங்கள் நிறைந்தது மதுரை மீனாட்சி அம்மன்  கோயில். கடம்ப வனமாக இருந்து பிரமிப்பூட்டும் கோயிலாக உருவான இதன் தோற்றம் உலகையே ஈர்க்கிறது. மதுரையை ஆண்ட மாமன்னர்கள் மீனாட்சி  அம்மன் கோயிலுக்கு தங்கம், வைரம், வைடூரியம், நவ ரத்தின ஆபரணங்கள் செய்து காணிக்கையாக அளித்தனர்.
 
இந்த நகைகள் திருவிழாக்களின் போது முக்கியமாக 12 நாள் சித்திரை திருவிழா உற்சவங்களில் அம்மன், சுவாமிக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த அலங்காரத்தை  காண கோடி கண்கள் வேண்டும். கலை எழில் கொஞ்சும் அற்புத இந்த நகை குவியல் விவரங்கள்:-பாண்டி முத்து: விலை உயர்ந்த முத்து ஆபரணங்களான முத்து  சொருக்கு. எடை 162 தோலா. இதில் 4,921 முத்துக்களும், 844 சிவப்பு கற்களும், 120 பலச்ச வைரங்களும், 39 மரகதங்களும் பதிக்கப்பட்டுள்ளன. பெரிய முத்து  மேற்கட்டி. இதில் இருதலையாளி, கிளி, புலி, பறவைகள், தாமரைப்பூ, சூரிய காந்தியின் உருவங்கள் 71,755 முத்துக்களால் அமைந்துள்ளன. முத்து  உச்சிக்கொண்டை, முத்து மாம்பழக்கொண்டை, முத்தங்கிகள், முத்து மாலைகள். முத்துக் கடிவாளம் ஆகிய முத்தாரங்களும் உண்டு.
 
பட்டாபிஷேக கிரீடம்: மீனாட்சி அம்மன் கையில் பிடித்திருக்கும் ‘ஒற்றைக்கிளி’ பெரிய முத்துக்களால் ஆனது. பட்டாபிஷேக கிரீடம், இதன் எடை 134 தோலா.  920 மாணிக்கம்,78 பலச்ச வைரம், 11 மரகதம், 7 நீலம், 8 கோமேதகம் பகிக்கப்பெற்றது.ரத்தின செங்கோல்: எடை 67 தோலா. இதில் 761 சிவப்பு கற்கள், 21  பலச்ச வைரங்கள், 269 மரகதம், 44 முத்துக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
 
வாசுமாரை கிரீடம்: இதில் பெரிய மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. எடை 136  தோலா. இதில் 247 கெம்பு, 439 முத்து, 39 மரகதம், 300 பவளம், 27 பலச்ச வைரம், 6 நீலம், 2 மோமேதகம், 241 பவளம் பதிக்கப்பட்டுள்ளது.
 
தலைப்பாகை கிரீடம்: அம்மனுக்கு திருமலை நாயக்கர் அளித்த தலைப்பாகை கிரீடம். இதன் எடை 133 தோலா. 332 நன்முத்துக்கள், 474 சிவப்பு கற்கள், 158  பலச்ச வைரம், 27 மரகதம் பதிக்கப்பட்டுள்ளது.
திருமுடிச்சாத்து: திருமலை நாயக்கர் அளித்த மற்றொரு கிரீடம் “திருமுடிச்சாத்து”. பெண்கள் தலைமுடியை உச்சியெடுக்காமல், பின்பக்கமாக வாரி சடையாக  பின்னிப்போடுவது போன்ற வடிவமுடையது. இதன் எடை 83 தோலா. 324 கெம்பும், 116 பலச்ச வைரம், 3 நீலம், 2 மரகதம், 694 முத்துகள், 2 வைடூரியம்  பதிக்கப்பட்டுள்ளன. பிட்டுத் திருவிழாவில் வைகை ஆற்று வெள்ளத்தை அடைக்க சுவாமி தலையில் சுமந்து செல்லும் தங்க சுமையடை (எடை 84 தோலா. இதில் 76 வைரங்களும், 342 சிவப்பு கற்கள், 27 மரகதம் பொருத்தப்பட்டுள்ளன.) தங்க கூடை (எடை 25 தோலா. தங்க மண் வெட்டி (எடை 19 தோலா)
 
பவளக் கொடி பதக்கம்: 11 தோலா எடையுள்ள பவளக்கொடி பதக்கம். இதில் 64 மாணிக்க கற்களும், 25 முத்துக்களும் பதிக்கப்பட்டுள்ளன. 43 தோலா எடையுள்ள  பவள தாழ்வடம் 28 பவள மணிகள், 27 தங்க குண்டுமணிகளுடன் அமைந்தது.
 
வாகன பதக்கங்கள்: பெரிய அளவில் 2 வாகன பதக்கங்கள். ஒன்று 69 தோலா. மற்றொன்று 45 தோலா எடையுள்ளது. ஒன்றில் பட்டை தீட்டாத மாணிக்க கற்கள்,  18 நீலம், 8 மரகதம், 6 வைடூரியம், 7 கோமேதகம் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொன்றில் 83 மாணிக்க கற்கள், 12 நீலம், 6 வைடூரியம், 7 மரகதம், 3 கோமேதகம்  பதிக்கப்பட்டுள்ளன.
 
உரோமானிய காசுமாலை: ரோமானியர் வழங்கிய காசுமாலை. இதில் தங்க ரோமன் 48 காசுகள் 50 தங்க மணிகளுடன் கோர்க்கப்பட்டுள்ளன. இதன் எடை 21  தோலா. இதே போல் வெளிநாட்டினர் கொடுத்த காசுமாலை. கிழக்கிந்திய கம்பெனி வழங்கிய 73 தங்ககாசுகளுடன் கூடிய காசுமாலை. இதன் எடை 6 தோலா.  இதில் 2 தங்க காசு ஒரு தங்க பூத்தொங்கட்டம் கோர்க்கப்பட்டுள்ளன.
 
மிதியடிகள்: அம்மனின் திருவருடிகள் தாங்கும் தங்க மிதியடிகள் ஒன்றின் எைட 27 தோலா. 211 சிவப்பு கற்கள், 36 மரகத கற்கள், 40 பலச்ச வைரம், 2 முத்து,  2 நீலம், 2 வைடூரியம் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொன்றின் எடை 28 தோலா. 211 சிவப்பு கற்கள், 40 பலச்ச வைரம், 36 மரகத கற்கள், 2 நீலம், 2 முத்து, 2  வைடூரியம் பதிக்கப்பெற்றது.
 
தங்க சந்தன கும்பா: 49 தோலா எடையுள்ள தங்க சந்தன கும்பா. திருமலை நாயக்கர் அளித்த சுவாமியின் 323 தோலா எடையுள்ள தங்க உருவம், 196 தோலா  எடையுள்ள அம்மன் தங்க உருவம்.
 
நாகர் ஒட்டியாணம்: இடுப்பில் கட்டும் நாகர் ஒட்டியாணம். இதில் 113 மாணிக்க கற்கள், 28 பலச்ச வைரம், 8 மரகத கற்கள், 66 முத்துக்கள் பதித்தது. இதன் எடை  33 தோலா.
நீலநாயக பதக்கம்: திருமலை நாயக்கர் அளித்த நீலநாயக பதக்கம். ஆபரணங்களில் இதுவே மிக அற்புதமானது. எந்த பக்கம் பார்த்தாலும் பளபளப்பும், ஒளியும்  ஊடுருவி பளிச்சிடும். இதை விக்டோரியா மகாராணி பார்த்து, லண்டனுக்கு கொண்டு சென்று மீண்டும் கொண்டு வந்து சேர்த்துள்ளார். இதன் எடை 21 தோலா.  இதில் 10 பெரிய நீல கற்கள், 2 கெம்பு, 1 கோமேதம் பதிக்கப்பட்டுள்ளது.
 
திருமஞ்சனக் கொப்பரை: ஒரு நீராவி கப்பல் உரிமையாளர் பெரிய வெள்ளி கொப்பரை காணிக்கை அளித்தார். இதன் எடை 3,020 தோலா.
 
தங்க காசுமாலை: நகரத்தார் காணிக்கையாக அளித்த 2 தங்க குடங்கள். ஒரு குடத்தின் எடை 2 கிலோ, 323 கிராம். மற்றொன்று 2 கிலோ 325 கிராம். இது தவிர  23 தோலா எடையுள்ள காசுமாலை, இதில் 55 காசுகள் உள்ளன.
 
வைர கிரீடம்: ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு பி.டி.ராஜன் தலைமையில் கோயில் மகாகும்பாபிஷேகம் நிறைவேற்றியபோது அம்மனுக்கு வைர கிரீடம்  செய்யப்பட்டது. இது 3,500 கிராம் எடையுள்ளது. இதில் வெளிநாட்டில் பட்டை தீட்டப்பட்ட 399 காரட் எடையுள்ள முதல் தரமான 3,345 வைர கற்கள், 600  காரட் எடையுள்ள 4,100 சிவப்பு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இது தவிர எட்டரை காரட் எடையுள்ள ஒரு மரகத கல்லும், அதே எடையில் ஒரு மாணிக்க கல்லும்  பொருத்தப்பட்டுள்ளன. கிரீடத்தின் உயரம் பதிநான்கரை அங்குலம். அதன் அடிப்பகுதி சுற்றளவு 20 அங்குலம். சிற்ப சாஸ்திர முறைப்படி அமைந்தது.
தங்க கவசம்: அம்மன் தங்க கவசம் 7 ஆயிரம் கிராம் எடையுள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் 1974ல் நடைபெற்ற குடகுழுக்கு விழா மலரில் தங்கவேல் தேசிகர் எழுதிய  கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. அதில் கோயிலின் எண்ணற்ற ஆபரணங்களில் சில சிறந்த ஆபரணங்கள் பற்றி மட்டும் எழுதி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதில் குறிப்பிடாத ஆபரணங்களும் இருக்கிறது என்பது தெளிவாகிறது.1981ல் மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றபோது மீனாட்சி அம்மன் கோயில்  நகைகள் கண்காட்சியாக வைக்கப்பட்டன. இதன் பிறகு காட்சிக்கு வைக்கப்படவில்லை.
கருவூலத்தில் உள்ளன.கடந்த 30 ஆண்டுகளில் மீனாட்சி அம்மன்  கோயிலுக்கு தங்கத்தேர் செய்யப்பட்டுள்ளது. இது 7 கிலோ தங்கம் 30 கிலோ வெள்ளியால் ஆனது. தொடர்ந்து கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக தங்க கிளி  உள்ளிட்ட ஏராளமான ஆபரணங்கள் குவித்துள்ளனர். வெள்ளியம்பல நடராஜர் சன்னதி முழுவதும் வெள்ளி பதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற  கும்பாபிஷேகத்தில் தங்க விமானம் செய்யப்பட்டுள்ளது.