மார்கழி வெள்ளியில் மகாலக்ஷ்மி வழிபாடு!

கனகதாரா ஸ்தோத்திரம்; பால் பாயசம் நைவேத்தியம்!

மார்கழி வெள்ளிக்கிழமையில் மகாலக்ஷ்மியை வழிபடுவோம். மங்கல காரியங்களை இல்லத்தில் நடத்தித் தருவாள் மகாலக்ஷ்மி.

மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மார்கழி மாதம் என்பது தபஸ் செய்வதற்கு உகந்த மாதம். மார்கழி மாதம் என்பது கலைகளைக் கற்றறிவதற்கான மாதம். மார்கழி மாதத்தில் தினமும் சிவ வழிபாடு செய்யவேண்டும். திருவாசகம் பாராயணம் செய்யவேண்டும். தேவாரப் பாடல்கள் பாராயணம் செய்யலாம். முக்கியமாக, திருவெம்பாவை பாராயணம் செய்து வழிபடலாம். அதேபோல், அன்னை பராசக்தியையும் வழிபட்டு பிரார்த்தனைகள் செய்யவேண்டும்.

மார்கழி மாதத்தில், மகாவிஷ்ணு வழிபாடு இன்னும் வளம் தரக்கூடியது. நலம் தரக்கூடியது. ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ எனக் கிருஷ்ணாவதாரத்தில் அருளியுள்ளார் மகாவிஷ்ணு. அதன்படி, மார்கழியில் மகாவிஷ்ணுவை வழிபடுவது மகத்தான பலன்களைத் தந்தருளும்.

மகாவிஷ்ணுவைப் போற்றி வணங்கும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவும் மார்கழியில்தான் வரும். அதேபோல் சிவபெருமானைக் கொண்டாடும் ஆருத்ரா தரிசன வைபவமும் மார்கழியில்தான் கொண்டாடப்படுகிறது.

ஆகவே, மார்கழியில் மகாவிஷ்ணு வழிபாடு என்பது இம்மையிலும் மறுமையிலும் எண்ணற்ற பலன்களைத் தரும். மகாவிஷ்ணுவின் திருமார்பில் குடியிருக்கும் மகாலக்ஷ்மியை வழிபடுவதும் சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளும் என்கிறார்கள் முன்னோர்கள்.

மகாலக்ஷ்மிக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர யோகம் கூடிய அற்புத நாள் வெள்ளிக்கிழமை. இந்த நன்னாளில், மகாலக்ஷ்மியை வெண்மை நிற மலர்களால் அர்ச்சித்து வழிபடுவது காரியத் தடைகளையெல்லாம் நீக்கி அருளும்.

மகாலக்ஷ்மி ஸ்லோகம் பாராயணம் செய்யலாம். மகாலக்ஷ்மி காயத்ரி சொல்லி வழிபடலாம். கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யலாம். மகாலக்ஷ்மியை தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபடலாம்.

அபிராமி அந்தாதி பாராயணமும் லலிதா சகஸ்ரநாம பாராயணமும் கனகதாரா ஸ்தோத்திரமும் பாராயணம் செய்யலாம். அம்பாள் சொரூபங்களை வணங்கி வழிபடலாம். மகாலக்ஷ்மிக்கு உகந்த பால் கலந்த இனிப்பு வகைகளை நைவேத்தியமாகச் செய்து வணங்கலாம். பால் பாயசம் நைவேத்தியம் செய்வது, இல்லத்தில் இதுவரை இருந்த தரித்திர நிலையையே மாற்றிவிடும் என்பது ஐதீகம்.

மகாலக்ஷ்மியை சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமையில் வழிபடுவோம்; வளமும் நலமும் பெற்று சுபிட்சத்துடன் வாழலாம் என்கிறார்கள் முன்னோர்கள்