டில்லி

நேற்று நடந்த தாக்குதலில் இஸ்ரேல் நாட்டு ஏவுகணைகள் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் ஜெய்ஷ் ஈ முகமது தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியது. இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த இயக்கம் காஷ்மீர் எல்லைப் பகுதியில் முகாமிட்டு மேலும் பல தற்கொலைப்படை தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தது. அந்த தாக்குதலை தடுக்க இந்தியா திட்டமிட்டது.

நேற்று இந்திய விமானப்படை 12 மிராஜ் விமானங்கள் மூலம் காஷ்மீர் எல்லை தாண்டி சென்று ஜெய்ஷ் ஈ முகமது இயக்க முகாம்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்களும் அங்கிருந்தவர்களும் அடியோடி அழிக்கப்பட்டனர். இதில் இந்திய வீரர்களுக்கு இழப்பு ஏதும் இல்லை. இதற்கு நாடெங்கும் உள்ள அனைத்து தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆயுத நிபுணரும் என் டி டி வி யின் பிரபலமுமான விஷ்ணு சோம் தனது டிவிட்டரில், “இந்திய விமானப்படையினர் ஸ்பைஸ் 2000 என்னும் ஏவுகணையை பயன்படுத்தி உள்ளனர். இஸ்ரேலில் செய்யப்பட்ட இந்த ஏவுகணை 100 கிமீ தூரம் வரை துல்லியமாக தாக்கக்கூடியதாகும். இது ஒரு சக்தி வாய்ந்த ஏவுகணை ஆகும்.

இந்த ஏவுகணையில் முன்கூட்டியே அழிக்க வேண்டிய இடம் குறித்த தகவல்களை பதிவு செய்ய முடியும். அதன் பிறகு அந்த ஏவுகணை அருகில் உள்ள இடத்தில் விமானம் மூலம் வீசும் போது அந்த அழிக்க வேண்டிய இடத்தை தேடி இந்த ஏவுகணை முழுமையாக அழிக்கும் திறன் கொண்டது.” என தெரிவித்துள்ளார்.