அருள்மிகு ஶ்ரீ தீர்த்த குமாரசாமி திருக்கோயில், நாகமலை,

(ஈரோடு to அறச்சலூர் சாலையில் 22-k.m. தொலைவு) அறச்சலூர்,

ஈரோடு மாவட்டம்.

பழமையான  சிறிய ஆலயத்தில் ‘எனை.ஆளும் ஆண்டவன்’ எம்பெருமான் முருகன், தீர்த்த குமாரசாமி எனும் திருப்பெயர் கொண்டு  சிறு குமரனாக அழகு அருட்காட்சியளிக்கிறார்.

பாம்பு  வளைந்து செல்வதுபோல இம்மலை தொடர்ச்சி காட்சி தருவதாலும், ஆதிகாலத்துச் சிறிய பாம்பு சிற்பம் கல்லினால் வடிக்கப்பட்டிருப்பதாலும் இம்மலைக்கு நாகமலை என்னும் பெயராம்.

இம்மலை தொடர்ச்சியின் வடக்குச்  சரிவில் கீழ்புறமாக சுமார் ஒன்றறை கிலோமீட்டர் தொலைவில் ஆண்டிப்பாறை பகுதியில் இயற்கையாய் அமையப்பெற்ற குகையில் உள்ள சுமார் 1900-ஆண்டுகள் பழமையான ‘இசைக் கல்வெட்டும்’ மூன்று சமணர் படுகைகளும் அதிகம் அறிந்திடாத வரலாற்றுச் சிறப்பு மிக்கவை)

பங்குனி உத்திர திருநாள் இந்த சிறு மலையில் அருட்குடிகொண்டிருக்கும் தீர்த்த குமாரருக்கு விசேஷமான திருநாளாம்.

பவுர்ணமி கிரிவலம் செல்வது இந்த நாகமலையில் பிரசித்தம்.

தை பூசம், பங்குனி உத்திரம், கிருத்திகை, பவுர்ணமி மற்றும் முருகப்பெருமானுக்கு உகந்த முக்கியமான விசேஷ நாட்களில் மட்டும் இந்த ஆலயம் நீண்ட நேரம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் அதிக நேரம் திறந்திருக்காது.

மணப்பேறு, மகப்பேறு விவசாயம் மற்றும் தொழில் விருத்திகளுக்கு செவ்வாய்க்கிழமைகளில் தீர்த்த குமாரசுவாமிக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகிறது.