ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம நவநீதகிருஷ்ணன் கோயில், நங்கநல்லூர், சென்னை

* பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. நங்கநல்லூர், மூவரசம்பேட்டை செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.

* இந்தத் தலம், பரசுராமரின்‌ தந்தை ஜமதக்னி முனிவர் மகா யக்ஞம் செய்த இடம். பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவருக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. பிரகலாதனுக்காகத் தூணைப் பிளந்துகொண்டு வந்த நரசிம்மரைத் தரிசிக்க வேண்டும் என்பதுதான்.

* அதற்காக யாகம் நடத்தினார். யாகத்தீயின் நடுவே உக்கிரமாகத் தோன்றினார் நரசிம்மர். அவரை சாந்தமாக இருக்கும்படியும் தான் பெற்ற தரிசனம் மற்றவர்களும் பெற வேண்டும் என்றும் வேண்டினார். அதனால் லட்சுமியை மடியில் ஏந்தி புன்னகைத்த திருக்கோலத்துடன் இங்கு எழுந்தருளினார்.

* நங்கையாகிய லட்சுமி தோன்றிய இந்த இடம் நங்கை நல்லூராகி இன்று நங்கநல்லூராய் திரிந்து உள்ளது.

* காலப்போக்கில் புதையுண்டு போன இந்தக் கோயில் 1974 ம் ஆண்டு வீடுகட்டுவதற்கு எனத் தற்செயலாகத் தோண்டும்போது நிலத்தில் இருந்து ஆலய பூஜைக்குரிய தூபக்கால், தீபத்தட்டு, மணி ஆகியவை கிடைத்தன. இதைத் தொடர்ந்து அந்த இடம் மிகக் கவனமாகத் தோண்டப்பட்டது. அப்போது, சங்கு சக்கரதாரியான மகாவிஷ்ணுவின் விக்கிரகத் திருமேனி ஒன்றும் சிதைந்த கோயிலின் பகுதிகள் சிலவும் கிடைத்தன. இந்தத் தலத்தில் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம் ஒன்று பல்லவர் காலத்தில் இருந்திருப்பதைக் கல்வெட்டுச் செய்திகள் உறுதிசெய்தன. உடனே, நங்கநல்லூரில் அதே பகுதியில் வசிக்கும் பக்தர்களால் நடத்தப்படும் `ஸ்ரீ கிருஷ்ண பக்த சபையினர் ஒன்றிணைந்து அதே இடத்தில் இப்போதிருக்கும் புதிய கோயிலைக் கட்டி எழுப்பினர்.

* இங்கு மூலவராக ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் லக்ஷ்மி தாயாரோடு ஆனந்தத் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் கருவறைக்கு ஒருபுறம் ஸ்ரீ ராமர் சீதா தேவியோடும் இளையபெருமாளோடும் காட்சிகொடுக்கிறார். இவருக்கு எதிரே ஆஞ்சநேயர் கைகூப்பியபடி அருள்கிறார். மற்றொருபுறம் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் சந்நிதி உள்ளது. இவை தவிர, பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் வேதாந்த தேசிகர் சந்நிதியும் உள்ளது. ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதியில் காட்சிகொடுக்கிறார்.

* 1,500 ஆண்டுக்காலப் பழைமையும் பெருமையும் வாய்ந்தது, ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம நவநீத கிருஷ்ணன் திருக்கோயில். வடக்குபுற சந்நிதியில் நர்த்தன கிருஷ்ணர் ஆடியபடி அருள் பாலிக்கிறார்.

* நான்கு கரங்களுடன் அமர்ந்திருக்கும் மூலவர் லட்சுமி நரசிம்மர் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி கீழ் வலக்கரம் அபய முத்திரை காட்டுகிறது. இடது கரத்தால் மடியில் உள்ள லட்சுமியை அணைத்தபடி காட்சி தருகிறார்.

* இந்தக் கோயிலில் நடைபெறும் திருமாங்கல்யச் சரடு உற்சவம் எனும் திருக்கல்யாணம் விசேஷமானது. இந்த வைபவம் 1978-ம் ஆண்டு‌ முதல், சுமார் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆண்டுதோறும், தை மாதம் மூன்றாம் வெள்ளியன்று நடைபெற்றுவருகிறது. இதில் கலந்து கொள்ளும் திருமணமாகாத இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்வையொட்டி தாயாருக்குப் பத்தாயிரத்திற்கும் மேலான திருமாங்கல்யச் சரடுகள் சார்த்தப்பட்டு, உற்சவம் முடிந்ததும் இந்தச் சரடுகள் கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்வு வேறு எந்தத் தலத்திலும் காணக் கிடைக்காத ஒரு சிறப்பான நிகழ்வாகும்.

* ராமர் சந்நிதி முன் எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயருக்கு `அமெரிக்க ஆஞ்சநேயர்’ என்ற செல்லப் பெயரும் உண்டு. இவரை வேண்டிக்கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றவர்கள் அநேகர்.

* சக்கரத் தாழ்வாருக்கு முன்பாக ஒரு பிரார்த்தனைச் சக்கரம் உள்ளது. அது அகழ்வாய்வின்போது கிடைத்த பெருமாளின் சிலையில் இருந்த பிரயோகச் சக்கரம். அதை இங்கு சக்கரத்தாழ்வார் சந்நிதி முன்பாகப் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர் அந்தச் சக்கரத்தின் மீது கைகளை வைத்து வழிபட, நினைத்தது நிறைவேறும் என்பது ஐதிகம்.