பித்ருதோஷம் நீக்கும் நவக்கிரகங்கள் – பழூர் காசி விஸ்வநாதர் கோயில்
விசுவநாதரை வணங்கக் காசிக்குச் செல்ல முடியாதவர்கள் ,திருச்சி – கரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று வரலாம். இங்குள்ள நவக்கிரகங்களை வழிபட்டால் பித்ருதோஷம் நீங்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இக்கோயிலில் 9 நவக்கிரகங்களும் தம் தேவியருடன் காட்சி தருவது தனிச் சிறப்பு.
ஒருவருக்கு ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்குமானால்,அவர்களுக்கு வேலை கிடைப்பதில் தாமதம்,திருமணத் தடை,குழந்தை பெறுவதில் தாமதம் கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனை, மனதில் அமைதியின்மை போன்ற பிரச்சனைகள் எல்லாம் ஏற்படும். தோஷங்களில் மிகவும் பிரதானமானது பித்ரு தோஷம். பித்துக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்றால் பித்ருதோஷம் ஏற்படுகிறது.
திருச்சி – கரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த காசி விஸ்வநாதர் கோயில் பித்ருதோஷ  பரிகார ஸ்தலமாகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. நாகம நாயக்கர் என்பவர் பித்ருதோஷம் நீங்கக் காவிரிக்கரையில் காசி விஸ்வநாதர் – ஸ்ரீ விசாலாட்சிக்குக் கோயில் கட்டினார்.
அனைத்து தோஷங்களும் நீங்கத் தேவியருடன் நவக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டுப் பலனடைந்தார். ஆலமரங்கள் நிறைந்த இப்பகுதியில், அதன் பழங்கள் அதிகம் கீழே விழுந்து காணப்பட்டதால்,பழம் ஊர் என பெயர் ஆனது. பின்னர் அதுவே நாளடைவில் மருவி பழுவூர் ஆனது. இப்போது பழூர் எனப்படுகிறது. இவ்வாலயத்தில் உள்ள நவக்கிரகங்கள் தங்களை நாடி வருபவர்களின் பித்ருதோஷம் நீங்க அருளாசி புரிகின்றனர்.