அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர், கடலூர்.

அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர், கடலூர்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு வாய்ந்த திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
அறுபத்து நான்காயிரம் திருத்தலங்களைத் தரிசித்த பலனை அளிக்கும் என்று தேவி தலங்கள் தரிசித்த சருக்கும் – திருப்பாதிரிப்புலியூர் புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
காசியில் இறக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தில் தரிசிக்க முக்தி. இவையனைத்தையும் ஒருங்கே வணங்கிய பலனைத் தரவல்ல திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
இறைவன் சித்தர் வடிவில் உலாவி நோய் தீர்த்து அருள்பாலித்த திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
இறைவி அருவமாகத் தங்கி தவமிருந்து பூசித்து, இறைவனை மணம் புரிந்ததனால் திருமண தோஷ நிவர்த்தி திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
இறைவி, இறைவனைப் பூஜிக்க உதவியாக இருந்த விநாயகப் பெருமான் பாதிரி மலருடனும் சப்த கன்னிகைகள் தனிச் சந்நிதியிலும் அருள்பாலிக்கும் திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
இறைவியின் சந்நிதிக்கு பதிலாக இறைவனின் சந்நிதியில் பள்ளியறை அமைந்திருக்கும் தனித்துவம் வாய்ந்த திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
கங்கை பாப விமோசனம் பெற்ற சிவஹர தீர்த்த திருக்குளம் அமைந்துள்ள திருத்தலம், திருப்பாதிரிப்புலியூர்.
அக்னி பகவான் பாவ விமோசனம் பெற்ற திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
உபமன்யூ, பிரம்மசீலன் ஆகியோர் வழிபட்ட சிறப்பு வாய்ந்த திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
உருத்திரசன்மன் பாப விமோசனமடைந்து கண் குருடு நீங்கப்பெற்ற திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
சத்தியசந்தன் தன் மனைவியோடு வணங்கி சூலை நோய் நீங்கப்பெற்ற திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
மார்த்தாண்டன் இறைவனை வணங்கி குடல் நோய் நீங்கப்பெற்ற திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
காசியபரின் மனைவி அதிதி பத்து வியாழக்கிழமைகள் அம்மையை வணங்கி ஆதிதேயரைப் பெற்ற திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பட்ட திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
மாணிக்கவாசக, வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்),. அருணகிரிநாதர், வள்ளலார் ஆகியோர் பூஜித்த திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
மங்கண முனிவர் சாப விமோசனம் அடைந்த திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
சமணத்தைச் சார்ந்திருந்த இப்பகுதியை ஆண்ட மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி.600-630) சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறிய அப்பர் பெருமானைத் தண்டிக்கும் பொருட்டு அவரை ஒரு கல் தூணில் பிணைத்து கடலில் பாய்ச்சியபோது, அக்கல் தூணையே தெப்பமாக மிதக்கச் செய்து கரையேற அருளிய (அந்த இடம் தற்போதைய கறையேறவிட்டகுப்பம்) அதிசயம் நடந்த திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
தன்னை தரிசிக்க வந்த மாணிக்கவாசகருக்காகக் கெடிலம் நதியின் போக்கையே திசை மாற்றியமைத்த (எனவே தான் திருக்கோயிலுக்கு தென்பால் ஓடிக்கொண்டிருந்த கெடிலம் நதி இன்று திருக்கோயிலுக்கு வடபால் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது வரலாறு) அதிசயம் நிகழ்ந்த திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
12 வகையான பூக்களைப் பூக்கும் பாதிரி மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் பிறந்தவர்கள், பஞ்ச பூதங்களில் நெருப்புடன் தொடர்புடைய சிம்ம ராசிக்காரர்கள் மற்றும் மகம், பூரம், உத்திரம் நட்சத்திரக்காரர்கள் கிரக தோஷம் நீங்க வணங்கவேண்டிய பாதிரி மரத்தை விருட்சமாகக் கொண்ட திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
தொல்காப்பியரால் கலம்பகம் (திருப்பாதிரிப்புலியூர் கலம்பகம்) பாடப்பெற்ற திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்
கபிலரின் குறிஞ்சிப்பாட்டு (குறிஞ்சிப்பாட்டு 70-74), பாலத்தனாரின் சங்க நூலான நற்றிணை, பெருங்கெடுங்கோவின் நற்றிணையில் பாலை ஆகியவற்றில் இடப்பெற்ற பாதிரியை விருட்சமாக்கக் கொண்ட திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக இருந்த இலக்கணம் சிதம்பர முனிவர் ஸ்ரீ பாடலீஸ்வரர் தலபுராணம் பாடியுள்ள திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.
கன்னிவன புராணமும், திருப்பாதிரிப்புலியூர் நாடகமும் புறச்சமய கோளரி மாமுனி என்பவரால் இயற்றப்பட்டிருப்பதான செய்தி அடங்கிய முதற்குலோத்துங்க சோழரின் (கி.பி.1070 – கி.பி.1120) 
நாற்பத்தெட்டாம் ஆண்டின் (கி.பி.1119) கல்வெட்டு அமைந்துள்ள திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர்.