சிங்கிரி கோவில் ஸ்தல வரலாறு
இத்திருத்தலத்தில் கருவறையின் வடக்கு தெற்கு மேற்கு ஆகிய திசைகளில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் சம்புவராயா் மற்றும் விஜய நகர மன்னர்கள் ஆண்ட காலத்தைச் சார்ந்தவையாகும்.
கல்வெட்டின் படி இத்திருத்தலப் பெருமாளை அவுபளநாயனாா் எனக் குறிப்பிட்டுள்ளது. இத்திருத்தலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டிலேயே திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்ற சிறப்பினை உடையதாகும். கி.பி.  1336-1337 ஆம் ஆண்டுகளில் ஆட்சிபுரிந்த முதலாம் சம்புவராய மன்னர் இராச நாராயணன் என்பவரால் கட்டப்பட்ட கோயிலாகும்.  இதை கி.பி.14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டின் தகவலின் படி அறிய முடிகிறது.
கி.பி. 1426ஆம் ஆண்டினைச் சார்ந்த விஜயநகர மன்னரின் கல்வெட்டு ஒன்றில் இவ்வூரினை ஒபிளம் என்று இறைவனை சிங்கபெருமாள் எனவும் குறிப்பிடபட்டுள்ளது, தற்போது சிங்கிரி கோவில் என்பது சிங்கபெருமாள் கோயில் என்பதன் திரியாக கருதப்படுகிறது.
விசைய மகாராயர் குமாரர் சச்சிதானந்த உடையார் கல்வெட்டில் முருங்கைபற்றைச் சார்ந்த மீனவராயன் செங்கராயன் என்பவன் திருவிளக்கு ஏற்ற நிலம் தானமளித்த செய்தியை தருகிறது.
இத்திருத்தலம் கி.பி.14ஆம் நூற்றாண்டில் முதலாம் சம்புவராய மன்னர் இராச நாராயணன் என்பவரால் கட்டட கோயிலாக நிர்மாணிக்கபடுவதற்க்கு முன்னரே கி.பி. 8ஆம் நூற்றாண்டு காலத்திலேயே சிறிய சன்னதியில் எழந்தருளியிருந்து சேவை சாதித்து பக்தர்களாகிய நம் அனைவரையும் அனுக்கிரகித்து கொண்டிருக்கும் லட்சுமி நரசிம்ம சுவாமியின் இத்திருக்கோயில் சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.  விஸ்தாரமான கருவைறயில் தாயார் பெருமாளின் வலது தொடையில் அமர்ந்து அருள்கிறார்.  தாயார் இவ்வாறு பெருமாளின் வலது தொடையில் அமர்ந்து அருள்வது அரிதான சிறப்பாகும்.
திருக்கோயிலுக்கு செல்லும் வழி:  வேலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் கண்ணமங்கலத்திலிருந்து 5கி.மீ. தொலைவில் ஒர் சிறிய ஆற்றங்கரையின் அருகில் சிறிய மலையில் உள்ளது,மலை மேல் ஏறி செல்ல சுமார் 104 படிகட்டுகள் உள்ளன.
ஆலய தரிசன நேரம்:  காலை 9-00 மணிமுதல் 12-00 மணி வரை மாலை 5-00 முதல் 6-00 மணி வரை