அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோவில் பற்றிய சில விவரங்கள்
கடலூர் மாவட்டத்தில் திருத்தளுர் எனும் ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோவில்.

மூலவர் :- சிஷ்டகுருநாதேஸ்வரர் (பசுபதீஸ்வரர்)

உத்ஸவர் :- சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார் :- சிவலோக நாயகி (பூங்கோதை)
ஸ்தல விருக்ஷம் :- கொன்றை
தீர்த்தம் :- சூர்யபுஷ்கரிணி
புராணப்பெயர் :- திருத்துறையூர்
ஊர் :- திருத்தளுர்
மாவட்டம் :- கடலூர்
ஸ்தல வரலாறு :-
கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது, அகஸ்தியர் தென்திசைக்கு வந்தார். வழியில் அவர் பல தலங்களில் அமைந்திருக்கும் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவனின் திருமணத்தைக் கண்டார். அவர் இத்தலம் வந்தபோது சிவனின் திருமணத்தைக் காண விரும்பி லிங்கத்தையும், அம்பாளையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இருவரும் அவருக்கு மணக்கோலத்தில் காட்சி தந்தனர்.
இத்தலத்தில் அகஸ்தியர் சிவனை மேற்கு நோக்கியும், அம்பாளை வடக்கு நோக்கியும் வைத்து வழிபட்டார். அம்பாளின் திருமணம் வட திசையில் உள்ள கைலாய மலையில் நடந்ததால் இவ்வாறு செய்தார். இதன் அடிப்படையில் அம்பாள் வாமதேவ முகமாக (வடக்கு பார்த்து) தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கிறாள். அம்பாளை இக்கோலத்தில் காண்பது மிகவும் அபூர்வமானது.
ஸ்தலச்சிறப்பு :-
சித்திரை மாதம் முதல் வாரத்தில் மாலை வேளையில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இத்தலத்தில் இறைவன் ஸ்வயம்பு மூர்த்தியாக அருள் புரிகிறார்.
கோஷ்டத்தில் தட்சணாமூர்த்தி சன்னதிக்கு அருகே சிவன், சுந்தரருக்குக் காட்சி தந்த சிற்பம் உள்ளது.
ப்ரஹாரத்தில் பைரவர், சூரிய லிங்கம், ராமலிங்கம், பீமலிங்கம், சூரியபகவான், ஆதிகேசவ பக்தவத்சலர், கஜலக்ஷ்மி ஆகியோரும் இருக்கின்றனர். இங்குள்ள நர்த்தன விநாயகர் தனிச்சன்னிதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார்.
இக்கோவிலில் ப்ரதோஷத்தன்று நந்திக்குப் பூஜைகள் செய்யப்படும்போது, அருகில் நந்திக்கொடி கட்டுகின்றனர். சிவ வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்ற நந்திக்கு பிரதோஷத்தின்போது, நந்தியின் படம் அச்சிடப்பட்ட கொடியைக் கட்டி வழிபடும் வழக்கம் முன்பிருந்தது. காலப்போக்கில் இவ்வழக்கம் மறைந்துவிட்டது. இலங்கையில் உள்ள சிவாலயங்களில் இந்த வழிபாடு தற்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தலத்தில் நந்திக்கொடி கட்டி பிரதோஷ பூஜைகள் நடப்பது விசேஷம்.
சிவன் இத்தலத்தில் பெரிய லிங்க வடிவில் இருக்கிறார். பௌர்ணமி மற்றும் திங்கட்கிழமைதோறும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
பிரார்த்தனை :-
குருவின் ஸ்தலம் என்பதால் இங்கு சிவன், தட்சணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதனால் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன் :-
தட்சணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றுகின்றனர். இக்கோவிலில் தட்சணாமூர்த்திக்கு வியாழக்கிழமை மஞ்சள் புஷ்பம் சூட்டி, கொண்டைக் கடலை மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்பவருக்கு குருவின் திருவருளால் கோடி நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.