அறிவோம் தாவரங்களை – சுண்டை 

அறிவோம் தாவரங்களை – சுண்டை

சுண்டை. (Solanum torvum).

தமிழ்நாடு உன் தாயகம்!

எல்லா மண்ணிலும் இனிதாய் வளரும் பெரும் செடித் தாவரம் நீ!

கத்தரிச்செடி  உன் தம்பிச்செடி!

மலைச் சுண்டை, பேயத்தி, கடுகி, அமரக்காய் எனப் பல்வகைப் பெயரில் பரிணமிக்கும் பல பொருள் குறித்த ஒரு சொல் கிளவி நீ!

10 அடிவரை உயரம் வளரும் பெருஞ்செடித் தாவரம் நீ!

கசப்புச் சுவை கொண்ட முள் செடி நீ!

காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை, மலைச்சுண்டை, ஆணைச் சுண்டை என நால்வகையில் விளங்கும் நல்ல செடி நீ!

மூச்சுக்குமாய் நோய்கள், வயிற்றுப்புழுக்கள்,அஜீரணம், மலச்சிக்கல்,  நீரிழிவு, இருமல், மூலச்சூடு, ஆஸ்துமா,  மூக்கடுப்பு,தோல் நோய்கள் காசநோய், மண்டைக்  குடைச்சல், ஒற்றைத் தலைவலி ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

“நெஞ்சின் கபம் போம்;நிறை கிருமி நோயும் போம்;விஞ்சு வாதத்தின் விளைவும் போம்-வஞ்சியரே வாயைக் கசப்பிக்கும்; மாமலையில் உள்ள சுண்டைக்காயைச் சுவைப்பவர்க்குக் காண்” என அகத்தியர் குணபாடம் போற்றி புகழும் அற்புத மூலிகைச் செடி நீ!

வத்தல், குழம்பு, சூரணம், கசாயம், சூப் எனப்  பல்வகையில் பயன்படும் நல்வகைச்செடி நீ!

மலேசியாவில் பல்வலிக்குப் பயன்படும் விதைச் செடியே!

வியட்நாமில் மாதவிடாய்க்கு பயன்படும் இலை செடியே!

இலை, வேர்,  காய் என எல்லாம் பயன்படும் நல்ல செடியே!

சமைப்பதற்கும் மருந்துக்கும் பயன்படும் சத்துச் செடியே!

வெள்ளை நிறப் பூப் பூக்கும் நல்ல செடியே!

கொத்துக் கொத்தாய் காய் காய்க்கும் குறுஞ்செடியே!

ஒரு கனியில் சுமார் 200. விதைகளை உடைய உன்னதச் செடியே!

கிளைகள் மூலமும் விதைகள் மூலமும் இனப்பெருக்கம் செய்யும் இனிய  செடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.