ஸ்ரீ பத்ரிநாத் கோயில்
ஸ்ரீ அரவிந்தவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ பத்ரீநாராயணப் பெருமாள் திருக்கோவில், பத்ரிநாத் திவ்ய தேசம், சமோலி மாவட்டம், உத்தராகாண்ட் மாநிலம்.
பத்ரிநாத் கோயில் இந்தியாவின் உத்தராகாண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டத்தில் உள்ள மலை வாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில்.
இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக் நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கியமான கோவில்களுள் இதுவும் ஒன்று. 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும்.
இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இது ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.
உத்தவரும் பதரிகாஸ்ரமமும் :-
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது கிருஷ்ண அவதாரம் முடித்துக் கொண்டு, வைகுண்டம் செல்ல நினைக்கும் போது, தனது நண்பரும், அமைச்சரும், பரம பக்தருமான உத்தவர் கிருஷ்ணரைச் சந்தித்து, தன்னையும் வைகுண்டம் அழைத்துச் செல்ல வேண்டினார்.
உத்தவருக்கும், அர்ஜுனனுக்கு கீதா உபதேசம் செய்தது போன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவருக்கு உத்தவ கீதை எனும் ஆத்ம உபதேசம் செய்கிறார்.
பின்னர் உத்தவரிடம், உன் வாழ்நாள் காலம் முடிந்த பின் வைகுண்டம் வரலாம் என்றும், அதுவரை பதரிகாஸ்ரமம் சென்று தங்கி பகவானை தியானித்துக் கொண்டு, வாழ்நாள் இறுதியில் என்னை வந்தடைவாய் என்று பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்.
பத்ரிநாத் அருகில் உள்ள பதரி ஆசிரமத்தில் தங்கி, பகவானை தியானித்துக் கொண்டு, வாழ்நாள் முடிந்த பின் வைகுண்டம் ஏகி பகவானை அடைந்தார் உத்தவர்.
சனாதனமான, பெரும் புகழ் வாய்ந்த கலாசாரத்தின் நிலையான நம்பிக்கையின் சின்னமாக, ஸ்ரீபத்ரிநாத் / பத்ரிகாஸ்ரமத்தை தவிர, ஸ்ரீகேதார்நாத், கங்கோத்ரீ (கங்கையின் உற்பத்தி ஸ்தானம்), மேலும் யமுனோத்ரி (யமுனையின் உற்பத்தி ஸ்தானம்) ஆகிய 4 திவ்ய ஷேத்திரங்கள் இமயத்தில், உத்தராஞ்சலில் உள்ளன.
இதில் பத்ரிநாத் முதன்மையாக விளங்குகிறது. இதனால் புனிதமான இந்த க்ஷேத்திரம் தேவ பூமி என்ற பெயருடன் வணங்கப்பட்டு வருகிறது.
ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள படி (முதல் யுகம்) சத்ய யுகத்தின் ஆரம்ப காலத்தில் பகவான் ஸ்ரீமந் நாராயணன் தானே உலக நலத்திற்காகவும், பக்தர்களுக்குத் தனது திவ்ய தர்சனத்தை சுலபமாக்கி அனுக்கிரகிக்கவும் பத்ரிநாத் / பத்ரிகாஸ்ரமத்தில் (உத்ராகண்ட் – சமோலி மாவட்டம்) அர்ச்சா ரூபமாக எழுந்து அருள் பாலிக்கிறார்.
பத்ரி நாத் க்ஷேத்ரம் – ரிஷிகேஷிலிருந்து 300கி.மீ.(பஸ் மார்க்கத்தில்) உள்ளது. உயரம் 10,350அடி.
ஆழ்வார்கள் பாடல் பெற்ற 108 திவ்ய க்ஷேத்திரங்களில் 3 க்ஷேத்திரங்கள் இமாலய மலைச்சாரலில் (உத்தராஞ்சல்) உள்ளன.
1. பத்ரிநாத் – பத்ரிகாஸ்ரமம்
2. திருப்ருதி (ஜோதிர்மட்)
3. திருக்கண்டங் கடிநகர் (தேவப்ரயாக், ஸ்ரீகண்ட க்ஷேத்திரம்)