ஆலய தரிசனம்  :  ஸ்ரீ வைரவர்_திருக்கோவில்.. வைரவன்பட்டி, சிவகங்கை மாவட்டம்

ஆலய தரிசனம்  :  ஸ்ரீ வைரவர்_திருக்கோவில்.. வைரவன்பட்டி, சிவகங்கை மாவட்டம்
இது நகரத்தார்களின் ஒன்பது நகரக் கோவில்களுள் ஒன்றாகும். இத்திருக்கோயில் கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கிழக்கு நோக்கிய திருக்கோயிலாக இது அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கற்பகிரஹம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நடராஜர் சபை, முன் மண்டபம், பலி பீடம், கொடி மரம், அம்மன் சன்னதி, பள்ளியறை, பைரவர் சன்னதி, நந்தி மண்டபம், மேல் சுற்றுப் பிரகாரம், திருச்சுற்று மாளிகை, நடராஜர் கோபுரம், பரிவார சன்னதிகள், யாக சாலை, கோயில் கிணறு, மாலை கட்டும் மேடை, சந்தனம் இழைக்கும் மேடை, இராஜகோபுரம், வைரவர் பீடம், வைரவர் தீர்த்தம், போன்ற பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது.
இக்கோயில் கணபதி, முருகன், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் போன்ற தெய்வங்களின் சன்னதிகளும் அமைந்துள்ளன. சண்டிகேஸ்வரர் சன்னதி அருகே தல விருட்சமான அழிஞ்சி மரம் கல்லால் செய்து வைக்கப் பட்டுள்ளது. உள் பிரகாரத்தில் நாயன்மார்கள் அறுபத்து மூவர், கன்னி மூலை கணபதி, தட்சிணாமூர்த்தி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, ஆறுமுகப் பெருமான், வள்ளி, தெய்வயானை, சரஸ்வதி, ஆதி வடிவுடையம்மன், போன்ற தெய்வங்களின் சன்னதிகள் அமைந்துள்ளன. நவக்கிரக மேடையும் அமைந்துள்ளது. இராஜ கோபுரத்தின் எதிரே கோயில் ஊருணி நான்கு படித் துறைகளுடன் மிக அழகாக அமைந்துள்ளது.

வளரொளிநாதர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த கருவறை மூலவர் பழங்காலத்தில் அழிஞ்சி மரத்தின் அடியில் அமைந்து இருந்ததாகச் சொல்கிறார்கள். இத்திருக்கோயில் மண்டபங்கள், மற்றும் கோயில் முழுக்க பயன்படுத்தப்பட்டுள்ள, வெள்ளைக் கற்கள், வயிரவன் பட்டி, திருமெய்யம், தென்கரை, குன்றக்குடி போன்ற ஊர்களில் உள்ள மலைகளில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளது.

இக்கோயில்

விமானம்,
உபபீடம் (துணை பீடம்)
அதிட்டானம் (பீடம்)
சுவர் (கால்)
பிரஸ்தரம் (கூரை)
கிரீவம் (கழுத்து)
சிகரம் (தலை)
ஸ்தூபி (குடம்)

என ஏழு பகுதிகளுடன் நுண்ணிய வேலைப் பாடுகளுடன் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் மகா மண்டபத்தின் முகப்பு வாயிலில் ஆரம்பித்து எண்ணிலடங்கா சிற்பங்களின் வடிமைப்பு கண்ணையும் மனதையும் கவர்கின்றது. மகாமண்டபத்தூண்கள் முழுவதும் புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இலைகளுடன் கூடிய கொடிகளை அலகினால் பிடித்திருக்கும் அன்னப்பறவை,
வட்டக் கருவியைக் கையில் ஏந்தி நிற்கும் கந்தர்வர்,
மானோடும், சிவகணத்தோடும் தாருகாவனத்தில் தோன்றிய பிச்சாடனர்,
தாமரை மலரில் வீணை மீட்டும் வனிதா,
மீனாட்சி கல்யாண திருக்கோலம்,
மயில் மேல் சுப்பிரமணியர்,
சிவனும் பெருமாளும் ஒன்றாய் சங்கரநாராயணனாய்,
ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பெருமாள்,
ரிஷபத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் சிவன் பார்வதி ரிஷபாருடர் கோலத்தில்,
ஹிரண்யனை மடியில் போட்டு அவன் குடலை மாலையாய் போட்டுக்கொள்ளும் நரசிம்ம மூர்த்தி,
மார்க்கண்டேயரின் பக்திக்கு இணங்கி காலனை அழிக்கும் கால சம்ஹாரமூர்த்தி,
ஆறுமுகப் பெருமான் மயில் மேலே,
அங்குசம், பாசம் ஏந்திய நடனமாடும் நர்த்தன கணபதி.

முக மண்டபத்தின் பதினான்கு தூண்களில்

ஊர்த்துவ தாண்டவம்
எண் தோள் காளி தாண்டவம்
வைரவ மூர்த்தி
தெய்யனாஞ்செட்டியார்
அகோர வீரபத்திரர்
அக்னி வீரபத்திரர்
ஆடவல்லான்
மணிவாசகப்பெருமான்
மலைமகள்
திரிபுரசுந்தரி
பார்வதி
வீணை மீட்டும் வனிதை
ரதி
மன்மதன்
வேட்டுவன்
வேட்டுவச்சி
கோதண்ட ராமர்
இலட்சுமணப் பெருமாள்
சீதாபிராட்டி
பரதன்
மீனாட்சி திருக்கல்யாணம்

ஆகிய சிற்பங்கள் மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் பெரிய அளவில் பிரமாண்டமாய் செதுக்கப் பட்டுள்ளன.

வைரவன் கோயிலில் சிறியதும், பெரியதுமாக இரண்டு தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன. திருச்சுற்று மாளிகைப் பகுதியில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி,ஞான தட்சிணாமூர்த்தி வகையைச் சேர்ந்தது. ஆலமரமும், முனிவர்களும் இல்லாமல் தனித்துக் காணப் படுகிறது.

மற்றொரு தட்சிணாமூர்த்தி அளவில் பெரியதாகவும், கருவறை வெளிச் சுவரின் தெற்குப் பக்கமாக அமைந்துள்ளது. கருமை நிறக் கல்லில் ஆன மரத்தின்கீழே ஆசனத்தில் அமர்ந்து, முனிவர்களுக்குத் தத்துவம் போதிக்கும் வண்ணம் உள்ளது. இவரைச் சுற்றி இசைத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிவன் கோயிலில் இராமரது சிற்பமும் ஹனுமனது சிற்பமும் அருகருகில் அமைக்கப் பட்டுள்ளது எங்கும் காணாத அதிசயம். இங்குக் கருவறை சுற்றுப் பிரகாரத்தில் ஸ்ரீ ராமர்,விஸ்வரூப ஆஞ்சநேயரைவணங்கி நிற்பது அதிசயக் கோலம். இராமரது சிலையை விட ஹனுமனது சிலை சற்று பெரியதாக அமைக்கப் பட்டுள்ளது. ஹனுமான் இலங்கைக்குச் சென்று சீதா தேவி நலமுடன் உள்ளார் என்ற செய்தியைக் கொண்டு வந்து ஸ்ரீ ராமரிடம் கொண்டு சேர்த்தார். அந்த நல்ல செய்தி கேட்டு மகிழ்ந்த இராமர் நன்றிப் பெருக்குடன் ஹனுமனை கை கூப்பி வணங்கி நிற்கும் காட்சியே இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள அதிசயக் காட்சி. வேறெங்கும் இல்லாத காட்சி.

கோவிலின் உள் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு அருகில் பக்தியின் வெளிப்பாட்டிற்கு மகோன்னதமான உதாரணமாய், பக்தியின் உச்சத்தை விளக்கும், சாதாரண மனிதன் சிவ பக்தியில் உயர்ந்து நாயன்மார் அளவிற்கு உயர்ந்து கண்ணப்ப நாயனாராய் மாறலாம் என்பதை உணர்த்திய கண்ணப்பனின் சிற்பம் சிவபிரானுடன். கானகத்தின் தலைவன் கண்ணப்பன் காளஹஸ்தி நாதரின் கண்ணில் வழியும் இரத்தத்தைக் கண்டு பொறுக்காமல் தன் கண்ணை எடுத்து சிவபெருமானுக்கு வைக்கும் நோக்கோடு தனது கண்ணை அம்பால் அகற்றும் வேளையில் அதனைத் தடுத்தாட் கொள்ளும் சிற்ப வடிவம் கண் கொள்ளக் காட்சி. எதையும் எதிர்பாராத அன்பின் அடையாளம் கண்ணப்ப நாயனார் கடவுளுக்குச் சமமானவர்.

மேலும் நடராஜர் சபையின் முன் மண்டபம் அடையும் வாயிலில் பாயும் குதிரையை அடக்கி ஆளும் வீரர்களின் சிற்ப அமைப்பு சிறப்பு. வீரர்களின் உடை அலங்காரங்கள், அவர்களின் உடல் அசைவுகள், அவர்களின் முக உணர்ச்சிகள் தத்ரூபமாய் நம் கண் முன்னே சிற்ப வடிவில்.

இராஜ கோபுர வாயிலின் நிலைகளில் கொடிப் பெண்களின் சிற்பங்களைக் காணலாம். அவர்களின் முக அலங்காரமும், உடை அலங்காரமும், தலை அலங்காரமும் அக்காலத்திய பழக்க வழக்கத்தை நமக்குக் காட்டும் கண்ணாடிகள்.

திருக்கோயிலின் உள்ளே கல் மண்டபத்தின் மேற்கூரையில் ஒரு சிறு இடைவெளி கூட இல்லாமல் பல்வேறு வடிவங்கள் வண்ணம் தீட்டப் பட்டுள்ளன. எல்லாமே இயற்கையாகக் கிடைக்கும் வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்டுள்ளது. அவற்றில் திருமாலின் பத்து அவதாரங்கள், பஞ்சபாண்டவர்களின் உருவங்கள், வளரொளிநாதர், வடிவுடையம்மன் ஆகிய தெய்வங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

வைரவ தீர்த்தம்..

இத்தலம் பைரவரின் இதயமான தலமாக விளங்குவதாகச் சொல்கிறார்கள். இத்தல பைரவ தீர்த்தம், வடுக தீர்த்தம் என்றும் அழைக்கப் படுகிறது. தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்க ஸ்ரீ வைரவர் தனது சூலத்தைக் கோயிலின் தென் திசைப் பக்கம் ஊன்ற, அங்கு ஓர் ஊற்று தோன்றியது. இன்றும் வற்றாத ஊற்று இங்குப் பெருகுவதாகச் சொல்கிறார்கள் மக்கள்…

நன்றி : நெட்டிசன்  அசோக் குமார் முக நூல் பதிவு