தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி!

தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி!
தென்திருப்பதி என்று பக்தகோடிகளால் போற்றப்பெறும் தான்தோன்றி மலை ஒரு தலைசிறந்த புனிதத்தலமாகவும், பிரார்த்தனை தலமாகவும் திகழ்கிறது. கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் கரூருக்கு தெற்கே 4கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தில் திருப்பதி வெங்கடாஜலபதியே கல்யாண வெங்கடரமண சுவாமி எனும் திருப்பெயருடன் எழுந்தருளியுள்ளார்.
குன்றின் மேல் கோவில்
இந்த விஷ்ணுதலம் குன்றின் மேல் அமைந்துள்ளது. இக்குன்று மேல்புறம் உயர்ந்தும், கீழ்புறம் தாழ்ந்தும் காணப்படுகிறது. மூலஸ்தானத்தின் மேல்கட்டப்பட்ட கோபுரம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. குன்றின் மேல்புறம்குடையப்பட்டுள்ள அழகிய குடைவரையில் கல்யாண வெங்கடரமண பெருமாள், மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரம்மாண்ட வடிவம் கொண்ட இந்தப் பெருமாள், லட்சுமியைத் தனது மார்பில் தாங்கி இருக்கிறார்.  இதனால் இங்கு தாயாருக்குத் தனிச் சன்னிதி கிடையாது.
தலவரலாறு
ஒரு சமயத்தில் திருப்பாற்கடலில் திருமால், லட்சுமிதேவியுடன் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வாசலின் வெளியே ஆதிசேஷன் காவல் இருந்தார். அப்போது வாயுபகவான் இறைவனைச் சேவிக்க உள்ளே நுழைய முயன்றார். ஆதிசேஷனோ, வாயுபகவானைத் தடுத்து நிறுத்தினார். அதனால் இருவருக்குமிடையே முதல் ஏற்பட்டது. அந்த தருணத்தில் வெளியே வந்த பகவான் இருவரிடையே சமரசம் செய்து வைத்தார். இருவருக்கும் ஒரு போட்டியையும் வைத்தார்.
தான்தோன்றி மலை
அதாவது ஆதிசேஷன் திருவேங்கட மலையைத் தனது உடலால் அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். வாயுதேவன் அதைத் தனது பலத்தால் அசைத்துப் பிடுங்க வேண்டும். இதுதான் போட்டி. இந்த போட்டி ஆரம்பமாயிற்று. ஆதிசேஷன், மலையைத் தனது உடலால் சுற்றி இறுக அழுத்திக் கொண்டார். வாயு பகவான் அதனை பெயர்த்தெடுக்க முயன்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. கோபம் கொண்ட வாயு பகவான், தனது முழு பலத்தையும் கொண்டு பெரும் புயலாகவீசியபோது மலை சிதறுண்டு நாலா பக்கமும் விழுந்தன. அவ்வாறு சிதறி விழுந்த குன்றுகளில் ஒன்றுதான் இந்த தான்தோன்றி மலை என்று கூறப்படுகிறது.