திருநாகை சௌந்தர்யராஜன் திருக்கோயில்

திருநாகை சௌந்தர்யராஜன் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம். ஆகும்.

தலவரலாறு

நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது. திரேதாயுகத்தில் பூமாதேவி தவமிருந்த திருத்தலம், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயர் தவமிருந்த திருத்தலம்.

மூலவர் விமானம்

ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி படமும், கொடி மரமும் உள்ளன. அடுத்து கருடாழ்வார் சன்னதி உள்ளது. கோயிலின் வலது புறம் கோயில் குளம் உள்ளது. கருவறையில் மூலவர் சௌந்தரராஜப்பெருமாள் நின்ற நிலையில் உள்ளார். மூலவர் சன்னதிக்கு முன்பாக முன்பாக உள்ள மண்டபத்தின் வாயிலில் இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். அம் மண்டபத்தில் சௌந்தரராஜப்பெருமாள் கிடந்த திருக்கோலத்தில் உள்ளார்.

அடுத்து சேனை முதல்வர் சன்னதியும், ஆழ்வார் ஆச்சார்யன் சன்னதியும் உள்ளன. கருவறையைச் சுற்றியுள்ள உள் திருச்சுற்றில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. திருச்சுற்றில் வைகுண்டநாதர் சன்னதி, சௌந்தரவள்ளித் தாயார் சன்னதி, சீனிவாசப்பெருமாள் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ராமர் சன்னதி, வீர ஆஞ்சநேயர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. ஆண்டாள் சன்னதிக்கு முன்பாக கொடி மரம் உள்ளது.

பிரம்மாண்ட புராணம்

இத்திருத்தலம் குறித்த தகவல்கள் பிரம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டத்தில் 10 அத்தியாயங்களில் சௌந்திர ஆரண்ய மகிமை என்ற பெயரில் உள்ளன.

பேருந்து வசதி

இத்திருக்கோயில் அருகாக, மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் செல்கின்றன. சென்னையில் இருந்து வருகிறவர்கள் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கி, வேளாங்கண்ணி அல்லது திருவாரூர் மார்க்கத்தில் செல்லும் நகரப்பேருந்தில் பயணம் செய்து வந்தால் 2 கி.மீ தொலைவிலுள்ள பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் எதிர்ப்படுவது நம்பெருமாள் கோவில் ஆகும்.

கோயம்புத்தூர் மதுரை திருச்சி தஞ்சாவூர் மார்க்கத்தில் வருபவர்கள் பேருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக வந்தால் பழைய பேருந்து நிலையத்தின் முந்தைய நிறுத்தமான பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கலாம். பேருந்து புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்றால் கோட்டை வாசற்படி என்கிற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து மிக அருகில் உள்ள கோயிலை 10 நிமிட நடைப் பயணத்தில் வந்தடையலாம்.