திருவதிகை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் !

திருவதிகை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் !
பண்ருட்டியிலிருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவதிகை. அங்கிருந்து பாலூர் வழியாகக் கடலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அருள்மிகு அரங்க நாயகி உடனாய அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில்.
இங்கு ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டு பிரம்மாவுக்குச் சதுர்வேதத்தை உபதேசிக்கிறார்  அருள்மிகு அரங்கநாதர்.
பல்லவராயன் என்னும் சோழ மன்னனின் மகள், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் மீதும் தாயார் மீதும் மிகுந்த பக்தி கொண்டவள்.
ஸ்ரீரங்கம் சென்று தங்கினால் தினமும் அரங்கநாதரை வணங்கலாமே என்று அவள் எண்ணிக்கொண்டிருக்கையில், திருவதிகை தேசத்தை ஆண்டு வந்த மன்னன் அவள் மீது மையல் கொண்டு அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான் என்பதை அறிந்த பல்லவராயனின் மகள், தான் திருமணம் செய்து கொண்டு திருவதிகைக்குச் சென்றால் அரங்கனைத் தினமும் வழிபட முடியாமல் போகுமே என்று வருத்தமுற்றாள்.
அதனால் பல்லவராயர் தனது மகளைத் திருவதிகை தேச மன்னனுக்குத் திருமணம் செய்து கொடுக்கத் தயங்கினார். இதனை அறிந்த திருவதிகை தேசத்தை ஆண்ட மன்னனால் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்டது தான் திருவதிகை அருள்மிகு அரங்க நாயகி உடனாய அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில்.
ஸ்ரீரங்கத்தில் எவ்வாறு அரங்கனும் தாயாரும் சேவை சாதிக்கின்றனரோ அவ்வாறே இங்கும் சேவை சாதிக்கின்றனர் என்பதும், அமர்ந்த கோலத்தில் எட்டு அடி உயரத்தில் தாயார் சேவை சாதிக்கிறார் என்பதும், இங்குள்ள சக்கரத்தாழ்வாருக்கு கிருத்திகைதோறும் சுதர்ஸன ஹோமம் நடைபெற்று வருகிறது என்பதும் இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பு.