கூட்டுறவு சங்க தேர்தல் விவரங்களை இணையத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை

கூட்டுறவு சந்த தேர்தல் விவரங்களை தேர்தல் ஆணய இணய தளத்தில் பதிவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடைபெறும் போதெல்லாம் அதில் முறைகேடுகள் நடைபெற்றதாக  புகார்கள் எழுவது வழக்கமாகி விட்டது.   இதற்கு முக்கிய காரணமாக இது குறித்த விவரங்களை வெளியிடாதது தான் என  பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.    மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் பற்றிய விவரங்களும் வெளியிடப்படுவதில்லை என கூறப்படுகிறது.

இதை ஒட்டி காஞ்சிபுரம் அருகில் உள்ள உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவர் ஒரு பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவில், “இறந்து போன உறுப்பினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.   பல வேட்பாளர்களின் மனுக்கள் முறையாக பரிசீலனை செய்யாமலே நிராகரிக்கப் படுகின்றன.   இதனால் இந்த விவரங்களை இணைய தளத்தில் பதிய வேண்டும்” என கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி ஆஷா ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டது.   இந்த அமர்வு, “கூட்டுறவு சந்த தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் இந்த தேர்தல்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்பட வேண்டும்.” என உத்தரவிட்டுள்ளது.