டில்லி

வருமான வரிக் கணக்கு அளிக்கும் போது தவிர்க்க வேண்டிய தவறுகள்  பற்றி அறிந்துக் கொள்வோம்.

இந்த ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு அளிக்க வேண்டிய கடைசி தேதியாக ஜூலை 31 அறிவிக்கப்பட்டிருந்தது. அது வரி செலுத்துவோர் வசதிக்காக ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வரிக் கணக்கு செலுத்துவோர் படிவங்களை விண்ணப்பிக்க அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஏற்பட்டுள்ள சிறு தவறுகளால் வருமான வரித்துறைக்கு விரிவான விளக்கங்கள் அளிக்க நேரிடலாம்.

எனவே நாம் இங்குத் தவிர்க்க வேண்டிய தவறுகள் குறித்து அறிந்துக் கொள்வோம்.

இதில் முதலில் நாம் கணக்கு வருடம் மற்றும் சரியான படிவத்தைத் தேர்வு செய்ய வேண்டும். தவறான படிவத்தில் கணக்கு அளிக்கப்பட்டால் அந்த படிவம் தவறானதாகக் கருதப்பட்டு ரத்து செய்யப்படும். ஒரு தனி மனிதர் தனக்கு வருமானம் வரும்  இனங்களைப் பொறுத்துச் சரியான படிவத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

பெயர், முகவரி, தொலைபேசி அல்லது மொபைல் எண், பிறந்த தேதி, இ மெயில் முகவரி, உள்ளிட்டவை சரியாக அளிக்கப்பட வேண்டும். அத்துடன்  உங்கள் பான் கார்டில் கொடுக்கப்பட்ட விவரங்களும், இந்த விவரங்களும் ஒன்றாக இருக்க வேண்டும்.

இதர வருமானங்கள் என்னும் இடத்தில் வருமான விவரங்களைப் பலர் தருவதில்லை. இந்த பகுதியில் உங்களுடைய சேமிப்பு வங்கிக் கணக்கு, வைப்பு நிதி, வளர் நிதி, உட்கட்டு பத்திரங்கள் மற்றும் உள்ள முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வட்டி வருமானத்தைப் பதிய வேண்டும்.

பிரிவு 80டிடிஏ வின் கீழ் சேமிப்பு வங்கிக் கணக்கு வட்டிக்கு மட்டுமே வரி விலக்கு உண்டு. ஆனால் ஐந்து வருட சேமிப்பு பத்திரங்கள் போன்றவற்றுக்கு வரி உண்டு. அதே நேரத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள பிராவிடண்ட் ஃபண்ட் போன்றவை குறித்தும் விவரங்கள் தெரிவிக்க வேண்டும்.

வருமான வரிக் கணக்கில் உங்களுடைய அனைத்து வங்கிக் கணக்கு விவரங்களும் தெளிவாக வங்கியின் பெயர், கிளை மற்றும் ஐ எ ஃப் எஸ் சி கோட், கணக்கு  எண் உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும்.

குறிப்பாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள வருமானங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இந்த கணக்கு வருடத்தில் பணி மாறியவர்கள் தங்களுடைய முந்தைய வருமானம் மற்றும் தற்போதைய வருமானம் ஆகியவற்றைக் கணக்கில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்காவிடில் அவை சட்டவிரோதமான வருமானம் என வருமான வரித்துறை முடிவு எடுக்க நேரிடும்.

பலரும் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் கணக்கு அளிக்கத் தேவை இல்லை என முடிவு செய்கின்றனர். இது மிகவும் தவறானதாகும். ஒருவரின் வருட வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் அவசியம் வருமான வரிக் கணக்கு அளிக்கப்பட வேண்டும். அது மட்டுமின்றி வருமான வரி ஏதும் செலுத்தத் தேவை இல்லை எனினும் கணக்கு அளிக்கப்பட வேண்டும்.

வாழ்க்கைத் துணை மற்றும் மைனர் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்து அதில் கிடைக்கும் வருமானம் உள்ளிட்டவையும் உங்கள் வருமானமாகக் கருதப்படும்.

கணக்கு அளித்த பிறகு ஏதேனும் தவறுகள் உள்ளது தெரிய வந்தால் திருத்தப்பட்ட கணக்கை அளிக்க வேண்டும். இந்த திருத்தப்பட்ட கணக்குகளை அந்த கணக்கு வருட இறுதிக்குள் அளிக்க வேண்டும். உதாரணமாகக் கணக்கு வருடம் 2018- 19 க்கான திருத்தப்பட்ட கணக்குகளை 2020 ஆம் வருடம் மார்ச் 31க்குள் அளிக்க வேண்டும்.