ம் ஊரில் கலைஞர் குடும்பம் போல்,கர்நாடகாவில் கவுடா குடும்பம் பாரம்பரிய அரசியல் குடும்பம்.இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.

வெற்றி-தோல்விகளை இருவருமே அவ்வப்போது சந்தித்தாலும் அவர்களுக்கு-தத்தம் மாநிலங்களில் நிரந்தர வாக்கு வங்கி உள்ளது. இருவருமே முதல்வர்களாக இருந்தவர்கள்.

தி.மு.க.வை கலைஞர் குடும்பம் இயக்கி வருவது போல்- கர்நாடகாவில் தேவகவுடாவின் மதச்சார்பாற்ற ஜனதா தளம் கட்சியை டைரக்ட் செய்து வருவது , கவுடா குடும்பம் தான்.

கிட்டத்தட்ட 20 எம்.பி.க்களை அவர்கள்  வைத்திருந்த போது-இருவரையும் பிரதமர் பதவி தானாய் தேடி வந்தது.வாய்ப்பை பயன் படுத்தி கொண்டார் கவுடா.

‘என் உயரம் எனக்கு தெரியும்’ என்று அந்த வாய்ப்பை மறுதலித்தார் கருணாநிதி.

இருவருக்கும் உள்ள மற்றுமோர் அபூர்வ ஒற்றுமை- குடும்பத்து அரசியல் சண்டை. கலைஞர் குடும்பத்து அரசியல் சண்டையில் –

அழகிரி ஓரம் கட்டப்பட- அதே போன்றதொரு ஆபத்து கவுடா குடும்பத்திலும் உருவானது.நேரடியாக இல்லை என்றாலும் –அந்த விவகாரத்தில் மறைமுகமாக தலையிட்டு தீர்த்து வைத்துள்ளார்-ராகுல்.

என்ன சண்டை? எப்படி தீர்ந்தது.

கவுடாவின் பேரன் பிரஜ்வால்(அமைச்சர் ரேவண்ணாவின் மகன்) நீண்ட காலமாகஅரசியலில் இருக்கிறார்.

மற்றொரு பேரன் நிகில்( முதல்வர் குமாரசாமியின் மகன்) சினிமா நடிகர். திடீர் காளானாய் அரசியலில் முளைத்துள்ளார்.

தங்கள் கட்சியின் அரணான ஹசன் மக்களவை தொகுதியில் பிரஜ்வாலை நிறுத்த விரும்பினார் கவுடா.முதல் எதிர்ப்பு குமாரசாமியிடம் இருந்தே வந்தது.’’ஹசன் தொகுதி வேட்பாளர் என் மகன் நிகில் தான்’’ என பகிரங்கமாக அறிவித்தார் குமாரசாமி.கவுடா துவண்டு போனார்.

குடும்பத்து சண்டை குழாயடி சண்டையாக மாறும் சாத்தியங்கள் இருந்தன.குழம்பும் குட்டையில் மீன் பிடிக்க பா.ஜ.க.வும் காத்திருந்தது.

கர்நாடகாவில் மாண்டியா என்றொரு மக்களவை தொகுதி உள்ளது. காங்கிரசும், ஜனதா தளமும் பலமுள்ள தொகுதிகள். இங்கு காங்கிரஸ் வேட்பாளராக நடிகர் அம்பரீஷ் 3 முறை போட்டியிட்டு வென்றுள்ளார்.

அம்பரீஷ் மறைவை அடுத்து அந்த தொகுதியில் களம் இறங்க விரும்பினார் அவர் மனைவி சுமலதா. உள்ளுர் காங்கிரசார் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

‘சுமலதா போட்டியிட்டால் ஆதரிக்க தயார் ‘’என்று  பா.ஜ.க.வும் செய்திகளை கசிய விட்டது.

இத்தனைக்கும் அந்த தொகுதியில் சிட்டிங் எம்.பி.யாக இருப்பவர்- ஜனதா தளத்துக்காரர்.

இங்கு நடக்கும் கூத்துக்கள் ராகுல் கவனத்து கொண்டு செல்லப்பட்டது.அவரது ஆணையின் பேரில்-‘மாண்டியா ஜனதா தளத்துக்குத்தான். நாங்கள் போட்டியிட மாட்டோம்.சுமலதாவுக்கும் ஆதரவு இல்லை’’என மாநில காங்கிரஸ் தலைமை அறிவித்து விட்டது.

இதனால்-

சுமலதா கனவு –பகல் கனவானது.கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற பா.ஜ.க திட்டமும்‘பணால்’.

கவுடா குடும்ப சண்டையும் முடிவுக்கு வந்தது.

‘’மாண்டியா தொகுதியில் நிகில்- ஹசன் தொகுதியில்-பிரஜ்வால்’’என கவுடா அறிவித்து விட்டு- டெல்லி பறந்தார்.

ராகுலை சந்தித்தார்.மாண்டியா விவகாரம் முடிவுக்கு வந்ததை கூறி விட்டு –தொகுதி உடன்பாடு குறித்து பேச ஆரம்பித்தார்.

கர்நாடகாவில் இன்னும் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி இடையே உடன்பாடு எட்டப்பட வில்லை.அங்கு மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 12 இடங்களை கோருகிறது-கவுடா கட்சி.எட்டு மட்டுமே என்கிறது காங்கிரஸ்.

இந்த இழுபறியில்-

ராகுலை சந்தித்து உரையாடிய கவுடா’’ 2 இடங்களை குறைத்து கொள்கிறோம். 10 தொகுதிகள் வேண்டும்’’என்று கூறியுள்ளார்.

கவுடா குடும்ப சண்டையை ராகுல் சுமுகமாக தீர்த்துவைத்ததால் -2 இடங்களை அவர் விட்டுக்கொடுத்ததாக கர்நாடக ஊடகங்கள் சொல்கின்றன.

–பாப்பாங்குளம் பாரதி