குறைந்த விலை குடியிருப்பு உச்சவரம்பை ரூ. 1 கோடி ஆக்க கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை

டில்லி

குறைந்த விலை குடியிருப்பு உச்சவரம்பை ரூ.45 லட்சத்தில் இருந்து ஒரு கோடியாக உயர்த்த கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டுக் குழுவின் பரிந்துரைப்படி குறைந்த விலை குடியிருப்புக்கள் என சில குடியிருப்புக்களைப் பிரித்துள்ளன.  இந்த பிரிவின் கீழ் வரும் குடியிருப்புக்கள் ரூ.45 லட்சத்துக்கு விலை உள்ளவையாக இருக்க வேண்டும்.  அத்துடன் இந்த குடியிருப்புக்களின் பரப்பளவு நகரங்களில் 60 சதுர மீட்டருகுள்ளும்,  மற்ற இடங்களில் 90 சதுர மீட்டருக்குள்ளும் இருக்க வேண்டும்.

குறைந்த விலை குடியிருப்புக்களுக்கு அரசு குறைவான ஜிஎஸ்டி வரி விகிதம் உள்ளிட்ட பல சலுகைகளை அளித்து வருகிறது.   இது வசதி குறைந்த மக்களின் நலனுக்காக அளிக்கப்படும் சலுகைகள் ஆகும்.  தற்போது நிலங்களின் மதிப்பு மிகவும் உயர்ந்துள்ளது.  அத்துடன் கட்டிட செலவுகளும் மிகவும் அதிகரித்து வருகின்றன.   இதனால் பல குடியிருப்புக்கள் இந்த பிரிவின் கீழ் வருவதில்லை.

இது குறித்து கட்டுமான நிறுவனங்களின் சார்பில் தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டுக் குழுவுக்கு ஒரு கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையில், “தற்போதுள்ள நிலையில் நிலங்களின் மதிப்பு மற்றும் கட்டுமான செலவுகள் அதிகரிப்பால் பல குடியிருப்புக்கள் குறைந்த விலை பிரிவின் கீழ் வருவதில்லை.  இதனால் மக்களில் பலருக்குச் சலுகைகள் கிடைப்பதில்லை

குறிப்பாக நகர்ப்புறங்களில் இந்த நிலை உள்ளது.  இதையொட்டி குறைந்த விலை குடியிருப்புக்களின் உச்சவரம்பை ரூ.45 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக மாற்றி அமைக்க வேண்டும்.   இது நகர்ப்புற மக்கள் பலருக்குச் சலுகைகள் கிடைக்க வழி வகுக்கும்.  இதனால் மேலும் பல வீட்டு வசதி திட்டங்கள் நிறைவேற்றப்படும்.   இதனால் கட்டுமான நிறுவனங்களும் பலன் அடையும்” எனத் தெரிவித்துள்ளனர்.