ட்விட்டரில் தங்களது பயோவை மாற்றியமைத்த தேவேந்திர ஃபட்நாவிஸ் மற்றும் அஜித் பவார்!

மும்பை: தேவேந்திர ஃபட்நாவிஸும் அஜித் பவாரும் தத்தமது டிவிட்டர் கணக்கில் தங்கள் ‘பயோ‘ வை மாற்றியமைத்திருப்பது பரபரப்பான செய்தியாகியுள்ளது.

அவர்கள் தங்களது ட்விட்டர் பயோவில் முறையே தேவேந்திர ஃபட்நாவிஸ் முன்னாள் முதல்வரென்றும், அஜித் பவார் முன்னாள் துணை முதல்வர் என்றும் தற்போது மாற்றியுள்ளனர்.

மஹாராஷ்டிரா அரசியலில், நிமிடத்திற்கு நிமிடம் திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது சம்பந்தமாக செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமாக உள்ளன.

சிவசேனா-பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகள் இருந்தும் அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட முரண்பாடு  காரணமாக இழுபறியாகி, கவர்னர் ஆட்சிக்கு வந்து பின்பு தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா ஆட்சியமைப்பதாக இருந்து, யாரும் எதிர்பாராத திருப்பமாக அஜித் பவார் ஆதரவு எம் எல் ஏக்களுடன் பாஜக ஆட்சியமைத்தது.

தேவேந்திர ஃபட்நாவிஸ் முதலமைச்சராகவும்  அஜித் பவார் துணை முதலமைசராகவும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். இதனையடுத்து, சிவசேனாவும் சரத்பவாரும் தங்களிடம் 162 எம் எல் ஏக்கள் உள்ளதை நிரூபித்துள்ள சூழலில் இவ்வாறு இவர்கள் தங்களது பயோவை மாற்றியுள்ளனர்.