தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு: எடப்பாடி, ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை:

காராஷ்டிர மாநில  முதல்வராகப் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் பதவி ஏற்றுள்ள நிலையில், அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில்,  ஆட்சி அமைப்பதில் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக இன்று காலை பாஜக ஆட்சி அமைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, அஜித்பவார் துணைமுதல்வராகவும் பதவி ஏற்றார்.

இந்த திடீர் பதவி ஏற்பு நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  சரத்பவார், உத்தவ்தாக்கரே , காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல அரசியல் கட்சிகள், பாஜக பதவி ஏற்ற விதத்தை விமர்சித்து வரும் நிலையில்,  மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்ததற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றதற்கு வாழ்த்துகள். இது வெற்றிகரமான பதவிக் காலமாக அமைய வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில், “மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் தேவேந்திர பட்னாவிஸுக்கும் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் அஜித் பவாருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! மகாராஷ்டிராவின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உழைத்திட எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.