நாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு…

திருவண்ணாமலை: பிரசித்திப்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் நாளை மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், கோரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால்,  பக்தர்கள் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பஞ்ச பூத தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படும் தலம் திருவண்ணாமலை.   இங்குச்  சிவபெருமான் மலை வடிவமாகக் காட்சி அளிப்பதாக ஐதீகம். ஆண்டு தோறும் இங்கு கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை மாத தீபத் திருவிழா  தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் இறைவனும், இறைவியும் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  இரு தினங்களுக்கு முன்பு பஞ்சரத தேரோட்டம்  போன்றை பக்தர்கள் இன்றி கோவிலுக்குள்ளேயே நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து நாளை மகாதீபத்தை முன்னிட்டு,  அதிகாலை 4 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாகப் பரணி தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து,  பரம சிவனும், சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அர்த்தநாரீஸ்வரராகத் திருக்கோயிலில் காட்சியளித்ததும்  கோவிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்ட உள்ளது.

தீபத்திருவிழாவையொட்டி, வழக்கமாக  லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வந்தது, பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்வர். ஆனால்,  இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மேலும்,  மலை உச்சிக்கு சென்று மகா தீபத்தை தரிசனம் செய்யவும் அனுமதி கிடையாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்து உள்ளார்.

இன்று, நாளை (28, 29-ம் தேதி ) வருவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும்,  , தீபத் திருநாள் மற்றும் பவுர்ணமியன்று, கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

வெளியூர்களில் இருந்து திருவண்ணாமலை நகருக்குள் பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.