நெல்லை உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, கடல் மண் சுமந்து நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.

நெல்லை மாவட்டத்தின் திசையன்விளை அருகே அமைந்துள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில், தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாகும். இங்கு சுவாமி சுயம்புவாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தின் போது, கடல் மண் சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு வைகாசி விசாக விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, அதிகாலை 3.30 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் உச்சிகால பூஜை நடத்தப்பட்டு, பிற்பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். பக்தர்கள் பலரும், ஓலைப்பெட்டியில் கடல் மண்ணை சுமந்து, அதை கடற்கரையில் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனை தொடர்ந்து மாலையில் சாயரட்சை பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும், இரவில் சமய சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி, வீதி உலா வந்து, மகர மீனுக்கு காட்சி கொடுத்தார். இதனைத்தொடர்ந்து சுவாமிக்கு விடை ஆரத்தி பூஜை, அர்த்தசாம பூஜைகள் நடந்தேரியது.

இவ்விழாவை முன்னிட்டு நெல்லை, நாகர்கோவில், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உவரிக்கு சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் மேற்கொண்டிருந்தார்.