நாகப்பட்டினம்:  நாளை வேளாங்கண்ணி பெருவிழாவிற்கு, கொடியேற்றம் இந்த மாதம் நடைபெற உள்ள நிலையில், விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட  ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா ஆகஸ்டு 29ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதைத்தொடர்ந்து, செப்டம்பர் 7 ஆம் தேதி தேர் விழாவும், செப்டம்பர் 8 கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும், எளிமையான முறையில் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், வேளாங்கண்ணி ஆலய விழாவில் கலந்துகொள்ள  பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியிர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், நிகழாண்டில் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், வேளாங்கண்ணி பேராலய  பெருவிழா நிகழ்ச்சிகளை பொதுமக்கள், பக்தர்கள் பேராலய ஆராதனை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வழியே நேரடியாகக் காணப் பேராலய நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.