சென்னை:

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில்   5 ஏடிஜிபி தலைமையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த  அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றம் 35ஏ பிரிவுகளை ஐமத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில்,  நாடு முழுவதும் முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் காஷ்மீர் மசோதாவுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கண்காணிக்க காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மாநிலத்தின் ஐந்து மண்டலங்களுக்கும் தலா ஒரு ஏடிஜிபியை கண்காணி்ப்பு அதிகாரியாக நியமித்துள்ளார்.

இதன்படி, மேற்கு மண்டலம், கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மாநகருக்கு ஆயுதப்படை ஏடிஜிபி சங்கர் ஜிவால், மதுரை மாநகர் மற்றும் மதுரை, திண்டுக்கல் ராமநாதபுரம் சரகங்களுக்கு சிலைகடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங், மத்திய மண்டலம் மற்றும் திருச்சி மாநகருக்கு ஏடிஜிபி சைலேஷ்குமார் யாதவ், வடக்கு மண்டலத்திற்கு ஏடிஜிபி தாமரைச் செல்வன், திருநெல்வேலி மற்றும் நெல்லை சரகத்திற்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.