ஹெலிகாப்டரில் ராம்ரஹிம்

ரோஹ்தக்

லாத்கார குற்றத்தில் தண்டனை பெறப் போகும் சாமியார் ராம்ரஹிம்,  சிறையில் கட்டாந்தரையில் படுத்து தூக்கமின்றி தவித்ததாக சிறை டி ஜி பி கூறி  உள்ளார்.

அரியானாவின் தேரா சச்சா இயக்கத்தின் தலவர் சாமியார் ராம்ரஹீம் பலாத்கார வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.   அதை தொடர்ந்து ரோஹ்தக் மாவட்ட சிறைக்கு அனுப்பப்பட்டார்.    அவர் நீதிமன்றத்தில் இருந்து ரோஹ்தக்கில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்துக்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டார்.  ஹெலிகாப்டரில் அவருடைய பெட்டி மற்றும் பைகளை எடுத்துச் செல்ல, அவருடைய வளர்ப்பு மகள் என கூறப்படும் ஹனி பிரீத் கூடச் சென்றார்.

விருந்தினர் இல்லத்தில் நடந்த மருத்துவ பரிசோதனைக்குப் பின் அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  அங்கு அவருக்கு கைதி எண் 1997 வழங்கப்பட்டது.   சிறைக்கு தனது உடைகளை மட்டுமே எடுத்துச் செல்ல சாமியார் அனுமதிக்கப்பட்டார்.  தனக்கு முதுகு வலி உள்ளதாகவும்,  தனது குடும்ப மருத்துவர் வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.   அது மறுக்கப்பட்டு சிறை மருத்துவரை பரிசோதனை செய்ய அனுமதித்து பின் சிறைக்குள் அனுப்பப்பட்டார்.

சிறைத்துறை டிஜிபி கே பி சிங் , “சாமியாருக்கு எந்த வசதிகளும் செய்துத் தரப்படவில்லை.   மற்ற கைதிகளைப் போல் அவரும் வெறும் தரையில் படுத்து உறங்கினார்.   அவரை பாதுகாக்க கைதிகளில் இருவர் அவருடன் உள்ளனர்.  அந்த கைதிகள் அவர் தூக்கமின்றி தவித்ததாக கூறினார்கள்.   அவர் தங்கி இருப்பது மற்ற கைதிகள் தங்குவது போல் சாதாரண அறைதான்.   அங்கு ஏ சி வசதி  கிடையாது.

சாமியாருக்கு மினரல் வாட்டர் தரப்படவில்லை.   மற்ற கைதிகள் பருகும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையே அவரும் குடித்தார்.    இரவு உணவுக்கு பதில் பால் அருந்தினார்.   காலையில் க்ரீன் டீ குடித்தார்.   சிறை சமையல் அறையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியும் பருப்பும் தான் சாப்பிட்டார்.   அவருக்கு விசேஷ வசதிகள் செய்து தரப்பட்டதாக வந்தவை பொய்யான தகவல்கள்” என கூறினார்.