நிர்மலா தேவி விவகாரத்தில் உண்மையை மறைக்கவே டிஜிபி மாற்றம்: மு.க.ஸ்டாலின், ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை:

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உண்மை வெளிவரக்கூடாது என்பதற்காகவே கூடுதல் டி.ஜி.பி ஜெயந்த் முரளி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான, மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

இன்று, கொளத்தூர் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின,  செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் செயல் காரணமாக காவிரி பிரச்சினையை திசை திரும்பும் வகையிலேயே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் அநாகரிகமான பேச்சும், ஆளுநரின் செயல்பாடுகளும் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில்,சிபிசிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிடப்பட்ட நிலையில், சிபிசிஐடி கூடுதல் டி.ஜி.பி ஜெயந்த் முரளி மாற்றப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகத்தை எழுப்பி உள்ளதாகவும், உண்மையை மறைக்கவே இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது என்றும் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து உயர்நீதிமன்றம்  மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

பாமக தலைவர் ராமதாஸ்:

பாமக தலைவர் ராமதாசும், சிபிசிஐடி கூடுதல் டி.ஜி.பி ஜெயந்த் முரளி  மாற்றம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நிர்மலாதேவி விவகாரத்தில், மதுரை பல்கலைக்கழக நிர்வாகத்திலுள்ள பெரிய மனிதர்களின் தேவைகளுக்காக கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது குறித்த வழக்கை குழி தோண்டி புதைக்க சதி நடப்பதாகவும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அப்பிரிவின் தலைவரும், கூடுதல் தலைமை இயக்குனருமான ஜெயந்த் முரளி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

மேலிடத்திலிருந்து எவ்வளவு அழுத்தம் வந்தாலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் ஜெயந்த் முரளிக்கு பதில், 2015-ம் ஆண்டில் பல்வேறு புகார்களால் உளவுப்பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட அம்ரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவும் உள்ளது.

பாலியல் வலை வழக்கின் குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆளுனர் மாளிகையுடன் இணைந்து தமிழகஅரசும் சதி செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள அவர்,   இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை எந்த வகையிலும் உதவாது என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட  வேண்டும் என்றும்  வலியுறுத்தியுள்ளார்.