தனுஷ் பிடிவாதம்!: தவிப்பில் ரஜினி!

“தனுஷின் பிடிவாதத்தால் ரஜினி தர்மசங்கடத்தல் இருக்கிறார்” என்று ஒரு பேச்சு கோடம்பாக்கம் வட்டாரத்தில் உலவவே.. இது குறித்து விசாரிக்க ஆரம்பித்தோம். எல்லோருமே, தனுஷி மாரி 2 படத்தின் வெளியீட்டு விவகாரம்தான் காரணம் என்று தயாரிப்பாளர் சங்கம் பக்கம் கைகாட்டினார்கள்.

ஆகவே, தயாரிப்பாளர்கள் சிலரை சந்தித்துப் பேசினோம்.

அவர்கள் கூறியதன் தொகுப்பு:

முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு படங்களை வெளியிட்டு வந்தார்கள். இதனால் ஒரே நாளில் பலபடங்கள் வெளியாவது நடந்தது. இதனால் படங்களுக்கு போதிய திரையரங்கங்கள் கிடைக்காமல் போனது.  வலியவன் வெல்வான் என்பதற்கேற்ப, வாய்ப்புள்ள பெரிய தயாரிப்பாளர்கள் பல திரையங்களை தங்கள் வசம்  இழுத்து படங்களை வெளியிட்டார்கள். இன்னொருபுறம் சிறிய தயாரிப்பாளர்கள் திரையரங்குகள் கிடைக்காமல் திண்டாடினார்கள்.

ரஜினி – தனுஷ்

இந்த நிலையைப் போக்க, ரெகுலேசன் கமிட்டி ஒன்றை தயாரிப்பாளர்  சங்கம் அமைத்தது.  படங்கள் வெளியாகும் தேதியை இக்கமிட்டியே தீர்மானிக்கும். அதே நேரம் இப்படி தீர்மானிப்பதில் முறைகேடாக யாரும் இன்ப்ளூயன்ஸ் செய்ய முடியாது. அதாவது, தணிக்கை சான்றிதழ் பெறும் தேதியை அடிப்படையாக்க் கொண்டு படங்களுக்கான வெளியீட்டு தேதியை இந்தக் குழு ஒழுங்குபடுத்திக் கொடுத்து வந்தது.

அதோடு வெளியீட்டுக்காக இரண்டு தேதிகளை இக்கமிட்டி அளிக்கும் அதில் தங்கள் வசதிக்கு தயாரிப்பாளர்கள் முடிவெடுக்கலாம்.

இதை தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொண்டார்கள்.

இதனால் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகும்போது பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவது பெருமளவு தடுக்கப்பட்டது. அனைத்துத் தரப்புமே நிம்மதி அடைந்தது.

இந்த நல்ல நடைமுறையை சீர்குலைக்கும்படியாக சிலர் நடந்துகொள்ள ஆரம்பித்தனர்.   சமீபத்தில் அப்படி அத்துமீறியவர் நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி.

இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட நாளில் படத்தை வெளியிடாமல், வேறு படங்கள் வெளியாக ஒதுக்கப்பட்ட நாளில் தனது, திமிரு புடிச்சவன் படத்தை வெளியிட்டார். இதனால் அன்று வெளியான மற்ற படங்களுக்கு போதிய திரையரங்குகள் கிடைக்காமல் போனது. இது குறித்து விஜய் ஆண்டனியை தயாரிப்பாளர் சங்கம் எச்சரித்தும் அவர் பொருட்படுத்தவில்லை.

இதனால் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கக்கூடாது என்று ரெட் (தடை) போடவும் தயாரிப்பாளர் சங்கம் தீர்மானித்திருக்கிறது.

இந்த நிலையில் “திமிரு புடிச்சவன்” விஜய் ஆண்டனி போலவே இன்னொருவரும் தயாரிப்பாளர் சங்க கட்டுப்பாடுகளை மீறி களம் இறங்க திட்டமிட்டிருக்கிறார்.

அவர்.. தனுஷ்.

வரும் டிசம்பர் மாதம் மூன்று  தினங்களில் படங்களை  வெளியிட தயாரிப்பாளர் சங்கத்தின் ரெகுலேசன் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.

14ம் தேதி சீதக்காதி படத்தையும்,  21ம் தேதி  அடங்க மறு, பூமராங், சிலுக்கு வார்பட்டி சிங்கம் ஆகிய படங்களையும்  28ம் தேதி கனா ஆகிய படங்களை வெளியிட இக்கமிட்டி அனுமதி அளித்துள்ளது.

டிசம்பர் 21ம் தேதி மூன்று படங்கள் வெளியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென உள்ளே நுழைந்திருக்கிறார் தனுஷ். அவர் தனது மாரி-2 படத்தை அதே நாள் வெளியிடப்போவதாக தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறார்.

இது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 2019 ஜனவரியில்தான் மாரி 2 படத்தை வெளியிட தனுஷ் திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் தனது மாமனார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படம் பொங்கல் அன்று வருவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் முன்கூட்டியே தனது படத்தை வெளியிட முடிவு செய்துவிட்டார்.

தவிர, ரஜினி நடிப்பில் நேற்று வெளியான 2.0 படம் ஓடி முடிகிறபோது அந்த திரையரங்குகளில் மாரி – 2 படத்தை திரையிடலாம்.. பிறகு அதே திரையரங்குகளில் ரஜினியின் பேட்ட படத்தை திரையிடலாம் என்று திட்டமாம்.

இது தயாரிப்பாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாமனாரும் மருமகனும் சேர்ந்து, நவம்பர் டிசம்பர், ஜனவரி என மூன்று மாதங்களும் திரையரங்குகளை ஆக்கிரமித்து கொண்டால் பிற தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிடுவது  எப்படி என ஆதங்கப்படுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்கிற முறையில் இது குறித்து தனுஷிடம் விபரமாக எடுத்துக்கூறினார் நடிகர் விசால்.

மேலும், “டிசம்பர் 28 அல்லது ஜனவரி 14 இதில் எந்த தேதியில் வேண்டுமானாலும் மாரி – 2 படத்தை வெளியிட்டுக்கொள்ளுங்கள்” என்றும் எடுத்துரைத்தார்.

ஆனால் இதை தனுஷ் இதை ஏற்பதாக இல்லை. “என் படத்தை எப்போது ரீலீஸ் செய்ய வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிப்பேன்” என்று முகத்திலடித்தாற்போல் சொல்லிவிட்டார்.

இது தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் டிசம்பர் மாதம் வெளியிட அனுமதிக்கப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தை தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக குழு இன்று காலை 11 மணிக்கு கூட்டுவதாக இருந்தது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு நெருக்கமான சில தயாரிப்பாளர்கள் அவரிடம் கொண்டு சென்றார்கள். ரஜினியோ, “இதில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. 2.o, பேட்ட இரண்டுமே நான் நடிக்கும் படங்கள் மட்டுமே. தயாரிப்பாளர் அல்ல. தவிர அந்த படங்களும் தயாரிப்பாளர் சங்க குழுவின் அனுமதியின்படியே வெளியாகின்றன.   இதில் நான் என்ன செய்வது” என்று கேட்டிருக்கிறார்.

விசால்

அதற்கு தயாரப்பாளர்கள் தரப்பு, “நீங்களும் ஒரு தயாரிப்பாளர்தான். தவிர மூத்த நடிகர்.  நீங்கள் நடிப்பது மட்டுமே என்றாலும அந்தப் படத்தின் தயாரிப்பாளரை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள். அந்த வகையில் நீங்கள் நடிக்கும் படங்கள் எல்லமே உங்கள் சொந்தப்படம்தான். ஆகவே உங்கள் வாக்கை அனைவருமே மதிப்பார்கள். அதில் தனுஷ் என்ன விதிவிலக்கா?

தவிர உங்களது 2.o ஓடும் திரையரங்குகளில் அடுத்து தனுஷின் மாரி 2 வெளியாகி அடுத்து அதே திரையங்குகளில் உங்களது பேட்ட படம வெளியானால் மற்ற தயாரிப்பாளர்கள் என்ன செய்வது?

முறைப்படி தயாரிப்பாளர் சங்க குழு அளிக்கும் தேதியில் தனுஷும் தனது படத்தை வெளியிடுவதுதானே முறை” என்று கூறியிருக்கிறார்கள்.

ரஜினியும் யோசனையில் இறங்கியிருக்கிறார். அவர் மூலம் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்று காலை கூட இருந்த தயாரிப்பாளர் சங்க கூட்டம், ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தால் ரஜினி சங்கடத்தில் இருக்கிறார்.  தயாரிப்பாளர் தரப்பில் உள்ள நியாயம் அவருக்கு புரிகிறது. ஆனால்  தனது சில முடிவுகளை – விருப்பங்களை தனது மகள்களே பொருட்படுத்துவதில்லை என்ற நிலையில், மருமகனை தான் எப்டி கட்டுப்படுத்த முடியும்? அதே நேரம், தான் கட்டுப்படுத்தாவிட்டால், “ரஜினி குடும்பம் செய்யும் அடாவடி” என்கிற அளவுக்கு சிலர் பேச ஆரம்பித்துவிடுவார்களே…  என்பதுதான் ரஜினியின் வருத்தத்துக்கு காரணமாம்.

ரஜினியாய் இருப்பதன் சிரமம்  ரஜினிக்குத்தான் தெரியும்.. ஹீம்!

-ராம்

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Dhanush stubborn: Rajini is suffering, தனுஷ் பிடிவாதம்!: தவிப்பில் ரஜினி!
-=-