‘கர்ணன்’ படத்தின் அப்டேட் கொடுத்த நடிகர் தனுஷ்…!

‘பரியேறும் பெருமாள்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக தனுஷ் ட்விட்டரில் தெரிவித்தார்.

இப்படத்தின் டப்பிங் பணிகள் கிட்டதட்ட முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் தனுஷ் டப்பிங் செய்த புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கின்றனர்.

மேலும் இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்கில் கர்ணன் வெளியாகும் என அறிவித்தது.

சமீபத்தில் கர்ணன் படத்தின் முதல் பாடலான கண்டா வர சொல்லுங்க” பாடல் வெளியாகியது. இந்த பாடலை பார்க்கும் போது அசுரனுக்கு இணையான அசுரனை இந்த படத்தில் பார்க்க போகிறோம் என்பது மட்டும் உறுதி. கண்டா வரச் சொல்லுங்க பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

யூடியூப் தளத்தில் அதிகப் பார்வைகள் பெற்ற இப்பாடல், வெளியான முதல் 10 நாள்களிலேயே 1 கோடி பார்வைகளைப் (10 மில்லியன்) பெற்றுள்ளது.

இந்தப் பாடல், கர்ணன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்ததோடு சந்தோஷ் நாராயணன் திரையிசை வாழ்விலும் ஒரு திருப்புமுனைப் பாடலாகவும் அமைந்துள்ளது.

இதை தொடர்ந்து கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் பாடல் வெளியாகியுள்ளது. யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை தேவா, ரீத்தா பாடியுள்ளார்கள்.

இந்தப் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் டீசர் மிக விரைவில் வெளியாகும் என்று நடிகர் தனுஷ் இன்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.