கொரோனா பாதிப்பு – மும்பைக்கு முன்னுதாரணமாக மாறிய தாராவி!

மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று குறிப்பிடப்படும் தாராவியில், கொரோனா பாதிப்பு பெரியளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று பல செய்திகள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்த மும்பை மாநகருக்கே, தாராவி முன்மாதிரியாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தாராவியில், மிக நெருக்கமான மற்றும் சிறிய இடத்தில் சுமார் 15 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி, இங்கு முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. முதல் மரணமும் நிகழ்ந்தது.

அதனையடுத்து, அப்பகுதியில் பீதி ஏற்பட்டது. மிக மோசமான சுகாதார வசதிகள், இடநெருக்கடி, மக்கள் நெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தாராவி பெரியளவில் பாதிக்கப்படும் மற்றும் அதனால் உயிர் பலிகள் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்பட்டது.

ஆனால், நிலைமை வேறாக மாறிவிட்டது. தாராவி பகுதியில், கொரோனா பாதிப்பு பெரியளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மும்பை மாநகரை ஒப்பிடுகையில், தாராவியில் கொரோனாவின் பாதிப்பு மிகவும் குறைவாகும்.

இந்தவகையில், ஒட்டுமொத்த மும்பைக்கே தாராவி ஒரு முன்மாதிரியாக ஆகியுள்ளது. ஜூலை 1ம் தேதி நிலவரப்படி, தாராவியில் கண்டறியப்பட்ட மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெறும் 2282 மட்டுமே. அதாவது, வெறும் 3% மட்டுமே. இறந்தவர்களின் எண்ணிக்கை 80.

தாராவியின் மக்கள்தொகை மற்றும் இடஅமைவு ஆகியவற்றை ஒப்பிடுகையில், இது மிக மிக குறைவு என்கின்றனர் ஆய்வாளர்கள்.