மும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் சூழலில், ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி(சேரி) என்று அழைக்கப்படும் தாராவி, மாபெரும் ஆபத்தில் சிக்குண்டுள்ளது என்று கவலை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மொத்தம் 613 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள தாராவியில் வாழும் மக்களின் எண்ணிக்கை 15 லட்சங்கள். அதாவது 100 சதுர அடி இடத்தில் 5 முதல் 8 பேர் வாழும் கொடுமை அங்குள்ளது. மேலும், கழிவறை வசதியைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

உலக சுகாதார நிறுவன விதிமுறையின்படி, ஒரு மனிதன் வசிப்பதற்கு குறைந்தபட்சம் 20 சதுர அடி நிலம் தேவை. ஆனால், தாராவியிலோ அந்த இடத்தின் அளவு 10 சதுர அடிக்கும் குறைவு.

மும்பையிலேயே, தாராவியில்தான் அதிகளவு காசநோயாளிகள் உள்ளனர். இதற்கு காரணம் அங்கிருக்கும் மோசமான மக்கள் அடர்த்தி. இந்த நிலையில், அப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றினால், நிலைமையை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

எனவே, ஒட்டுமொத்த தாராவியே தற்போதைய சூழலில், ஒரு வெடிகுண்டின் வாயின்மேல் அமர்ந்திருக்கும் நிலையில் உள்ளது.
அங்கே, முறையான காற்றோட்டம், தண்ணீர் வசதி, வெளிச்சம் என்று மனித வாழ்விற்கு தேவையான அடிப்படை வசதிகள் என்று எதுவுமே கிடையாது. அதேசமயம், இப்பகுதி மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் வலுவானது என்றும் கூறப்பட்டுள்ளது.