மோடி அரசின் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கையால் மும்பை தாராவியில் அழிந்துவரும் சிறு தொழில்கள்

மும்பை:

உலகின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் சிறு தொழில்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


மும்பை தாராவி உலகின் மிகப் பெரிய குடிசைப் பகுதி என்றுதான் நமக்கு தெரியும். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தாராவிக்கு மற்றொரு முகமும் உண்டு.

இங்கு தோல் தொழிற்சாலை, ஆடையக தயாரிப்பு, பேக்கரி கடைகள் என ஏகப்பட்ட சிறு தொழில்கள் கொடி கட்டிப் பறந்தன.

எல்லாம் மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை வரை தான்.

அதன்பின் இங்கு சிறு தொழில்கள் படிபடிப்படியாக நசியத் தொடங்கிவிட்டன. தமிழர்களோடு கான்பூர், லக்னோ, கொல்கத்தாவிலிருந்து வந்த மக்களும் தொழிலில் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.

தொழிலை தொடர முடியாதவர்கள் தங்கள் சொந்த ஊருக்கே திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
கடைக்கு வாடகைகூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இங்கு தொழில் நடத்திக் கொண்டிருக்கும் பலர் தெரிவிக்கின்றனர்.

தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாததால், நிறுவனத்தை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள்.

தாராவியில் 300-க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இருந்தன. தற்போது இவற்றில் பல மூடப்பட்டுவிட்டன. இங்கு பணியாற்றி தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் மறு சுழற்சி தொழிற்சாலை, அலுமினிய தொழிற்சாலைகளுக்கும் இதே நிலைதான் தொடருகிறது.

தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் தகவல்களின் அடிப்படையில், கடந்த 2017-18 ஆண்டில் நாட்டில் பெருமளவு வேலை இல்லாத திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோடியோ வேறு புள்ளிவிபரத்தை கூறிவருகிறார் என்ற வருத்தம் தாராவியில் தொழில் நடத்துவோருக்கு உள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கமும் தங்கள் தொழிலை அழித்துவிட்டதாக வேதனையுடன் தெரிவிக்கிறார்கள் பேக்கரி நடத்தும் வர்த்தகர்கள்.

பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முன்னிலையில் இருப்பது நூற்பாலை நடத்துவோர்தான். தங்கள் உற்பத்தி தற்போது பாதியாக குறைந்துபோனதாக கூறுகிறார்கள்.

தொழில் நடத்துவோருக்கு வரவேண்டிய பணம், நிலுவையில் இருப்பதால் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

‘ஸ்லம்டாக் மில்லியனர்’ மற்றும் ‘காலா’ திரைப் படங்கள் தாராவி மக்களின் மோசமான வாழ்க்கை நிலையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின.
தேசிய மாதிரி சர்வே அலுவலகம் வேலை இல்லாத திண்டாட்டம் குறித்து கூறிய புள்ளிவிவரம் தவறானது என்று மோடி அரசு திரும்பச் திரும்பச் சொல்கிறது.

ஆனால், தாராவியில் அழிந்துவரும் சிறு தொழில்கள், தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் புள்ளிவிவரத்தின் உண்மையை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.