சொந்த சகோதரர்களே விஜய் சேதுபதியை கொலை செய்ய திட்டமிட… அவரை வெளியூருக்கு அனுப்பி வைக்கிறார், தாயார் ராதிகா. தான் எடுத்துச்செல்லும் பையில் எட்டு லட்சம் பணம் இருப்பது அவருக்குத் தெரியாது.  தனது பழைய நண்பர்களைத் தேடி விஜய் சேதுபதி புறப்படுகிறார். அவரது பையில் இருக்கும் பணம், அவரது சகோதரர்கள் நடத்தும் சீட்டுப்பணம். ஆகவே அங்கே பிரச்சினை வெடிக்கிறது.
இப்படி பல வித சுவாரஸ்ய முடிச்சுகளுடன் துவங்குகிறது படம்.
மருத்துவம் படித்த விஜய் சேதுபதி, கம்பீர டாக்டராய் ஊரில் வலம் வருவதற்கு பதில் குடிகாரராக தள்ளாடி தள்ளாடி தடம் பதிக்கிறார். சகோதரர்ககள் நடத்தும் சீட்டு கம்பெனிக்கு இவர் ஏராளமான தொல்லை தர.. சகோதரர்களே அவரை “சம்பவம்” செய்ய திட்டமிடுகிறார்கள். அதையடுத்துதான் அவரை தாயார், வெளியூருக்கு அனுப்பி வைக்கிறார்.
111
மருத்துவம் படித்த விஜய் சேதுபதி, குடிகாரரானது ஏன்.. அவர் என்ன ஆனார்.. ஊரில் சீட்டு கம்பெனி பிரச்சினை என்ன ஆனது.. இதுதான் மீதிக் கதை.
சுவாரஸ்யமான கதைப்பின்னலும் அதற்கேற்ற தெளிவான ஓடையாய் திரைக்கதையும் படத்துடன் நம்மை ஒன்ற வைத்துவிடுகிறது.
அடுத்ததா நடிகர்கள் தேர்வு. விஜய்சேதுபதி, ராதிகா,  தமன்னா… இப்படி அத்தனை கதாபாத்திரங்களும், பாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
“மிஸ்டர் கோப்பால்” என்று ஆரம்பித்து அரைகுறை ஆங்கிலம் பேசி கலகலக்க வைப்பதாகட்டும்…  அறைக்கதவு உடைக்க முயற்சிக்கும்போது அம்மாவின் குரல் கேட்க அவரைக் கட்டிக்கொண்டு அழுவதாகட்டும்.. ரசிக்கவும் நெகிழவும் வைக்கிறார் விஜய் சேதுபதி.
பிள்ளைகள் மீதான பாசம், அவர்களில் ஒருவனை மற்ற சகோதரர்கள் “ சம்பவம்” செய்ய திட்டமிடுவதை அறிந்து காட்டும் பதட்டம்… ராதிகாவும் வழக்கம்போல அசத்தியிருக்கிறார்.
குடும்ப கதைப்பின்னலோடு, சமுதாய பிரச்சினைகளை அணுகுவது  இயக்குநர் சீனு ராமசாமியின் பாணி. இந்த படத்தில் தற்போதைய மருத்துவர்களின் போக்கு, கிராமப்புறங்களில் மருத்துவர்களின் தேவை ஆகியவற்றை நெஞ்சில் பதியும்படி சொல்லியிருக்கிறார். ஊடாக குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை ஆகியவற்றையும் தொட்டிருக்கிறார் சீனு.
கல்லூரி காட்சிகளில் காதல் மெல்ல எட்டிப் பார்த்தாலும் வேறுவிதமாய் கொண்டு சென்றிருப்பது அழகு.
தமன்னாவுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே யான அன்பைக் காட்சிப்படுத்திய விதம் கவிதை.
‘காக்கா முட்டை’ நாயகி, ஐஸ்வர்யா ராஜேஷ் சிறிது நேரமே வந்தாலும் நிறைவான நடிப்பை அளித்திருக்கிறார். சிருஷ்டி டாங்கேவும் அப்படியே.  . எம்.எஸ்.பாஸ்கர், ராஜேஷ், கஞ்சா கருப்பு உள்ளிட்ட அனைவருமே அளவான அருமையான நடிப்பு.
எம். சுகுமாரின் கேமரா, தேனி, கோடைக்கானல் ஆகிய பகுதிகளை அப்படியே கண்முன் நிறுத்துகிறது.  , யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, சுகம்.
மொத்தத்தில் நல்ல விசயங்களை, சுவாரஸ்யமாக  சொல்லும் படம், தர்மதுரை.