மூன்று மாணவிகளை பலி வாங்கிய தர்மபுரி பேருந்து எரிப்பு கொலையாளிகள் விடுதலை

ர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தொடர்புடைய  மூன்று அதிமுகவினர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, அவர் மீதான பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், கடந்த 2000 ம் வருடம் பிப்ரவரி மாதம் 2ம் தேதி, சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர்.

கொன்றவர்கள்..

அப்போது, தர்மபுரியில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் சென்ற பேருந்து மீது, அதிமுகவினர் பெட்ரோல் குண்டு வீசி, தீ வைத்தனர். இதில் ஹேமலதா, காயத்ரி, கோகிலவாணி ஆகிய மூன்று மாணவிகள் தீயில் கருகி பலியானார்கள். மேலும் 16 மாணவிகள் காயமடைந்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக, தர்மபுரி ஒன்றிய அதிமுக. செயலாளர் ராஜேந்திரன், தர்மபுரி நகர முன்னாள் செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 24 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

தூக்கு தண்டனையை எதிர்த்து மூவரும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மூன்று பேரின் தண்டனையை கடந்த 2016-ம் வருடம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.

கொலையுண்டவர்கள்..

இந்நிலையில் எம்.ஜி.ஆர். பிறந்த தின நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய தமிழக அரசு சுமார் 1,600 கைதிகளை விடுதலை செய்தது. அப்போது தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 11 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ரவீந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகிய மூவரையும் விடுவிக்க தீர்மானித்தது.

இதற்கான ஆவணத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு ;அனுப்பியது. இதை அவர், ஏற்க மறுத்து விட்டார். இந்த நிலையில். இது தொடர்பாக ஆளுநருக்கு புதிய ஆவணம் அனுப்பப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட  ஆளுநர் அந்த மூவரையும் விடுதலை செய்ய ஒப்புக்கொண்டார். இதையடுத்து வேலூர் சிறையில் இருந்த மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.