ர்மபுரி

ர்மபுரி அருகில் உள்ள சேஷப்ப நாயுடு கோட்டை கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றை காணவில்லை என காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரிமங்கலம் டவுன் பஞ்சாயத்தின் கீழ் வரும் கிராமங்களில் சேஷப்ப நாயுடு கோட்டை என்னும் கிராமமும் ஒன்றாகும்.   இந்த கிராமத்து மக்கள் தற்போது குடிநீர் பஞ்சத்தால் அவதியுற்று வருகின்றனர்.    இவர்கள் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு இதே கிராமத்தில் இருந்த ஒரு கிணற்றில் இருந்து குடிநீர் பெற்று வந்ததை கிராம முதியவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதை ஒட்டி கிராம மக்கள் குடிநீர் கிணற்றை கடந்த 50 வருடங்களாக காணவில்லை எனவும் அதை கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.    காவல்துறையினர் உள்ளாட்சி துறையிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.  அப்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த கிணறு இருந்த இடம் தற்போது குப்பை மேடாகி உள்ளது.  தவிர சுற்றி உள்ள பல இடங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.   கிணறு முழுவதும் குப்பைகளால் நிரப்பப்பட்டு தற்போது கிணறு எந்த இடத்தில் இருந்தது எனவே கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர், ”மக்கள் கிணற்றை தேடி தருமாறு புகார் அளித்தது உண்மைதான்.   ஆனால் கிணற்றை தேடுவது எங்கள் பணி எல்லைக்குள் வராது என்பதால் நாங்கள் எதுவும் செய்யவில்லை.  ஆகவே உள்ளாட்சி துறையினரிடம் இது குறித்து தெரிவித்துள்ளோம்” என கூறி உள்ளார்.

உள்ளாட்சி துறையினர் அங்குள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி குப்பைகளை எடுத்து அந்த கிணறு எங்குள்ளது என கண்டறியும் நடவடிக்கையில் இறங்கிஉள்ளனர்.   அத்துடன் குப்பைகளை கொட்ட வேறு இடம் தேடி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் கிணற்றை காணோம் என்று சொல்லும் நகைச்சுவை மிகவும் புகழ் அடைந்த ஒன்றாகும்.   தமிழக மக்களால் மறக்க முடியாத ஒரு நகைச்சுவை எனவே கூறலாம்.    அது நிழலாக இருந்தது இப்போது நிஜமாகி உள்ளது.